உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அவதுாறுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே சீமான் மீது வழக்கு: வருண்குமார்

அவதுாறுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே சீமான் மீது வழக்கு: வருண்குமார்

திருச்சி : “சீமான் மிரட்டலுக்கு எல்லாம் பயப்படும் ஆள் நான் இல்லை,” என்று திருச்சி எஸ்.பி., வருண்குமார் தெரிவித்தார்.நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தன்னையும், தன் குடும்பத்தாரையும் அவதுாறாக பேசியதாக, 2 கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு, திருச்சி நான்காவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் எஸ்.பி., வருண்குமார் வழக்கு தொடர்ந்தார்.

ஆஜரானார்

இந்த வழக்கு விசாரணைக்காக மாஜிஸ்திரேட் முன், வருண்குமார் நேற்று ஆஜரானார். பின், அவர் அளித்த பேட்டி: என் போலீஸ் பணிக்கும், இந்த வழக்குக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எனக்கும், நாம் தமிழர் கட்சிக்கும் தனிப்பட்ட பிரச்னை. இந்த பிரச்னை, 2021ல் பாக்ஸ்கான் நிறுவன பெண் தொழிலாளர்கள் போராட்டத்தில் துவங்கியது. அந்த பிரச்னையில், நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சாட்டை துரைமுருகன் மீது புகார் இருந்தது. வழக்குப்பதிவு செய்யப்பட்டது.பின், திருச்சியில் பணியில் சேர்ந்த பின், சாட்டை துரைமுருகன் மீது மற்றொரு புகார் வந்தது. அந்த புகாரின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டார்.அது முதல், நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சீமான், என்னையும் குடும்பத்தாரையும் அவதுாறு செய்து, ஜாதி ரீதியாக செயல்படுவதாகவும் பேசி வருகிறார்.

வழக்கை நடத்துவேன்

என் கடமையை செய்ததற்காக, சீமான் என்னை மிரட்டிப் பார்க்க நினைத்தார். மிரட்டலுக்கு பயப்படும் ஆள் நான் இல்லை. தன் கட்சியினருக்கு போலீஸ் பயப்பட வேண்டும் என, சீமான் நினைக்கிறார். எந்த அரசியல் கட்சியைச் சேர்ந்தோரும் இப்படி நடந்து கொள்வது கிடையாது.என்னையும், குடும்பத்தாரையும் மிரட்டியதை அடுத்து, முறைப்படி புகார் கொடுத்து போலீசில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் வாழ்நாள் முழுதும் கூட வழக்கை நடத்துவேன். ஒரு தொழிலதிபர் வாயிலாக சீமான் என்னிடம் மன்னிப்பு கேட்க, துாது விட்டார்; மறுத்துவிட்டேன்.பொதுவெளியில் என் மீது குற்றச்சாட்டு வைத்ததோடு, என் வீட்டு பெண்களை ஆபாசமாக சித்தரித்து பேசினார். கொலை மிரட்டல் விடுத்தார். பின், எதையும் சந்திப்பதாக சவால் விட்டார். இத்தனைக்கும் பின், மன்னிப்பு கேட்கிறேன் என்பதை எப்படி ஒப்புக் கொள்ள முடியும்; மறுத்து விட்டேன்.நடந்தவை எல்லாமே சீமான் துாண்டுதலில் நடந்தது தான். நாம் தமிழர் கட்சியினர், பெண்களை அவதுாறாக பேசிய பல வழக்குகளில் சிக்கியுள்ளனர். அவதுாறு பரப்பும் கலாசாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க, இந்த வழக்கை கடைசி வரை நடத்துவேன். சீமான் நிலைப்பாட்டில் பொய்யும், புரட்டுமே நிரம்பியுள்ளது.இவ்வாறு வருண்குமார் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

kanagasundaram
டிச 31, 2024 11:37

இந்தமாதிரி தில்லானா போலீஸ் ஆபிசர் இருந்தால் தான் இன்றைய சட்டம் ஒழுங்கை பாதுகாக்க முடியும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை