முன்னாள் அமைச்சர் வேலுமணியின் நிறுவனம் மீது வழக்குப்பதிவு
சென்னை: நெடுஞ்சாலை துறை பணிகளை மேற்கொள்ள, 2,000 கோடி ரூபாய்க்கு, 'டெண்டர்' எடுத்ததில், அரசுக்கு, 20 கோடி ரூபாய் வரை இழப்பீடு ஏற்படுத்தியதாக, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியின் நண்பர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர் வேலுமணியின் நிறுவனம் மீது, லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். பழனிசாமி முதல்வராக இருந்தபோது, நெடுஞ்சாலை துறையின் கீழ் சாலை மேம்பாட்டு பணிகளை மேற்கொண்டதில், மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது என, தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் சென்றன. தஞ்சாவூர், சிவகங்கை மற்றும் கோவை கோட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட சாலை மேம்பாட்டு பணிகள் மற்றும் உக்கடம் மேம்பால கட்டுமான திட்டப் பணிகள் குறித்தும், அது தொடர்பாக டெண்டர் விடப்பட்டது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டது. அதில், அ.தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் வேலுமணியின் நிறுவனம் மற்றும் பழனிசாமியின் நெருங்கிய நண்பரான ஓய்வுபெற்ற செயற்பொறியாளர் ஜெகதீசன் நடத்தி வரும் நிறுவனம் வாயிலாக, 2,000 கோடி ரூபாய்க்கு டெண்டர் எடுத்து, அரசுக்கு, 20 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படுத்தியது தெரியவந்தது. இது தொடர்பாக, ஜெகதீசன் மற்றும் வேலுமணியின் நிறுவனம் மீது, லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.