சீமான், வேட்பாளர் மீது வழக்கு பதிவு
ஈரோடு:ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் 5ல் நடக்கிறது. நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சீதாலட்சுமியை ஆதரித்து அக்கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஈரோட்டில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். ஈரோடு மரப்பாலம் அருகே முனிசிபல் சத்திரம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு நாம் தமிழர் கட்சியினர் தெருமுனை கூட்டத்திற்கு அனுமதி பெற்றிருந்தனர்.ஆனால் விதிகளை மீறி மேடை அமைத்து பிரசாரத்தில் ஈடுபட்டனர். தேர்தல் பறக்கும் படை அதிகாரி ஜெகநாதன் அளித்த புகாரின் படி, ஈரோடு, சூரம்பட்டி போலீசார் சீமான், வேட்பாளர் சீதாலட்சுமி, மாநில கொள்கை பரப்பு செயலர் சாட்டை துரைமுருகன் உள்ளிட்ட ஏழு பேர் மீது அரசு அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்தல், தேர்தல் விதிகளை மீறியது உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.