திருச்செந்துார் முருகன் கோயிலில் தரிசனத்தை ஒழுங்குபடுத்த வழக்கு: உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
மதுரை: திருச்செந்துார் சுப்பிரமணியசுவாமி கோயிலில் தரிசனத்தை ஒழுங்குபடுத்த வழிகாட்டுதல்களை உருவாக்க தாக்கலான வழக்கில் அறநிலையத்துறைக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. சென்னை வழக்கறிஞர் ராஜேஷ் தாக்கல் செய்த பொதுநல மனு: திருச்செந்துார் சுப்பிரமணியசுவாமி கோயிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு செய்ய வசதி இல்லை. கட்டணம் மற்றும் பொது தரிசன வரிசையில் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருக்கின்றனர். வரிசையாக நிற்க வைக்க, அமைதியை நிலைநாட்ட ஏற்பாடு இல்லை. ஆன்லைனில் முன்பதிவு செய்து தரிசன டிக்கெட் வழங்கி, உரிய நேரத்தில் அனுமதிக்க வேண்டும். இந்நடைமுறை திருப்பதி தேவஸ்தானத்தில் பின்பற்றப்படுகிறது. பொது தரிசனத்திற்கு பல வண்ணங்களில் டோக்கன் வழங்க வேண்டும். ஒவ்வொரு வண்ண டோக்கனுக்கும் நேரம் ஒதுக்கி பக்தர்களை அனுமதிக்க வேண்டும். பக்தர்களுக்கு வசதிகள் செய்ய வேண்டும். தரிசனம், சேவைகளை ஒழுங்குபடுத்த வழிகாட்டுதல்களை உருவாக்க வலியுறுத்தி அறநிலையத்துறை கமிஷனருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதிகள் அனிதா சுமந்த், சி.குமரப்பன் அமர்வு விசாரித்தது. கோயில் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் முத்து கீதையன், ''பக்தர்களுக்கு வசதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தரிசனம் முறைப்படுத்தப்பட்டுள்ளது. தற்போதைய நிலை அறியாமல் மனு தாக்கல் செய்துள்ளார்,'' என்றார். நீதிபதிகள் அறநிலையத்துறை கமிஷனர், துாத்துக்குடி கலெக்டர், கோயில் செயல் அலுவலருக்கு நோட்டீஸ் அனுப்பி டிச.9ல் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.