உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அக்டோபரில் 20.2 டி.எம்.சி., நீர் காவிரி ஆணையம் உத்தரவு

அக்டோபரில் 20.2 டி.எம்.சி., நீர் காவிரி ஆணையம் உத்தரவு

சென்னை:தமிழகத்திற்கு அடுத்த மாதம், 20.2 டி.எம்.சி., நீர் திறக்க, காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்தின், 44வது கூட்டம், அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தார் தலைமையில் நேற்று புதுடில்லியில் நடந்தது. இதில், தமிழகத்தின் சார்பில், நீர்வளத் துறை செயலர் ஜெயகாந்தன், காவிரி தொழில்நுட்ப பிரிவு தலைவர் சுப்பிரமணியம் ஆகியோர், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக பங்கேற்றனர். சேலம் மாவட்டம், மேட்டூர் அணையில் தற்போது, 92.1 டி.எம்.சி., நீர் இருப்பு உள்ளது. அணைக்கு வினாடிக்கு, 8,419 கன அடி நீர் வரத்து உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு, 9,033 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. கர்நாடக அணைகளில் நீர் இருப்பு மற்றும் வரத்து தொடர்கிறது. எனவே, தமிழகத்திற்கு அக்டோபர் மாதம் வழங்க வேண்டிய, 20.2 டி.எம்.சி., நீரை திறக்க உத்தரவிட வேண்டும் என, ஜெயகாந்தன் வலியுறுத்தினார். இதையடுத்து, தமிழகத்திற்கு அக்டோபரில், 20.2 டி.எம்.சி., நீர் திறக்க வேண்டும் என, கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !