உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மோசடி புகார் விசாரணை சி.பி.ஐ., பதிலளிக்க உத்தரவு

மோசடி புகார் விசாரணை சி.பி.ஐ., பதிலளிக்க உத்தரவு

சென்னை: போலி வங்கி உத்தரவாதம் அளித்து, அரசு ஒப்பந்தப் பணியை எடுத்து மோசடி செய்தவர் குறித்து விசாரணை கோரிய மனுவுக்கு, சி.பி.ஐ.,யின் எஸ்.பி., உள்ளிட்டோர் பதிலளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.சென்னை அடையார் பகுதியை சேர்ந்த ராஜ்குமார் என்பவர் தாக்கல் செய்த மனு:சென்னை அத்திப்பட்டை சேர்ந்தவர் ரவி. இவர் தன் நிறுவனம் பெயரில், மத்திய அரசின், 'பெல்' நிறுவனத்தில் ஒப்பந்த பணி எடுக்கலாம் என, என்னை அணுகினார். கடந்த 2020ல், இருவரும் ஒப்பந்தம் செய்து கொண்டோம். இந்த பணிக்காக, நான் பணம் செலவழித்தேன். பணி முடிந்த பின், பணத்தை கேட்ட போது, அதை ரவி தரவில்லை.விசாரித்த போது, வங்கி அதிகாரிகளுடன் கூட்டு சேர்ந்து போலி உத்தரவாதத்தை, 'பெல்' நிறுவனத்துக்கு ரவி கொடுத்து ஏமாற்றியது தெரியவந்தது. 'பெல்' நிறுவனம் மட்டுமின்றி, சென்னை மாநகராட்சி உள்பட பல இடங்களில், போலி வங்கி உத்தரவாதம் அளித்து, ஒப்பந்தப் பணிகள் எடுத்து மோசடி செய்ததும் தெரியவந்தது.இதுகுறித்து, 'பெல்' நிறுவனம் மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின், 'விஜிலென்ஸ்' தலைமை அதிகாரியிடம், 2023ல் புகார் செய்தேன்; நடவடிக்கை ஏதும் இல்லை. எனவே, என் புகார் மனுவை பரிசீலித்து, சி.பி.ஐ.,யின் லஞ்ச தடுப்பு பிரிவு விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இந்த மனுவை, நீதிபதி பி.வேல்முருகன் விசாரித்தார். மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் எஸ்.செந்தில்குமார் ஆஜரானார். இதையடுத்து, மனுவுக்கு சி.பி.ஐ.,யின் எஸ்.பி., பதிலளிக்க, நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ