உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு 97.39% தேர்ச்சியுடன் சென்னை 3ம் இடம்

சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு 97.39% தேர்ச்சியுடன் சென்னை 3ம் இடம்

சென்னை:சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வில் 97.39 சதவீத தேர்ச்சியுடன், சென்னை மண்டலம் மூன்றாமிடம் பிடித்து சாதித்துள்ளது.மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், பிளஸ் 2 பொதுத்தேர்வுகள், பிப்., 15 முதல் ஏப்., 4ம் தேதி வரை, 49 நாட்கள் நடந்தன. தேர்வு முடிவுகள் நேற்று, 'cbse.gov.in, results.cbse.nic.in' என்ற இணையதளங்களிலும், 'டிஜிலாக்கர் போர்ட்டல்' மற்றும், 'உமாங்' என்ற செயலியிலும் வெளியாகின. அதில், மாணவர்களின் பதிவெண், பள்ளி எண், பிறந்த தேதி விபரத்தை உள்ளீடு செய்து, முடிவை அறியும் வசதி செய்யப்பட்டு இருந்தது.இதில், 99.60 சதவீதத்துடன், விஜயவாடா மண்டலம் முதலிடத்தையும், 99.32 சதவீத தேர்ச்சியுடன் திருவனந்தபுரம் மண்டலம் இரண்டாம் இடத்தையும் பிடித்த நிலையில், 97.39 சதவீத தேர்ச்சியுடன், சென்னை மண்டலம் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது. நான்காம் இடத்தில், 95.95 சதவீதத்துடன் பெங்களூருவும், 95.37 சதவீதத்துடன், மேற்கு டில்லி மண்டலம் ஐந்தாம் இடத்தையும் தக்க வைத்துள்ளன. முதல் நான்கு இடங்களை, தென்மண்டலங்கள் பிடித்து சாதித்துள்ளன.நாடு முழுதும், 16 லட்சத்து, 92,794 மாணவ, மாணவியர் தேர்வு எழுதினர். அவர்களில், 14 லட்சத்து, 96,307 பேர் தேர்ச்சி பெற்றனர். இது, கடந்தாண்டை விட, 0.41 சதவீதம் கூடுதல். அதாவது, 88.39 சதவீத தேர்ச்சி கிடைத்துள்ளது.இதில், மாணவர்கள் 85.70 சதவீதமும், மாணவியர், 91.64 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசு பள்ளிகளில்... மத்திய அரசு நிதியுதவியுடன் செயல்படும், ஜவஹர் நவோதயா வித்யாலயாக்களில், 99.29 சதவீதத்தினரும், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், 99.05 சதவீதத்தினரும், மத்திய திபெத்திய பள்ளிகளில், 98.96 சதவீத மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.ஒரு லட்சத்து 11,544 மாணவர்கள், 90 சதவீதத்துக்கும் அதிகமான மதிப்பெண்களை பெற்று, மொத்த தேர்ச்சியில், 6.59 சதவீதத்தை பெற்றுள்ளனர். 24,867 மாணவர்கள், 95 சதவீதத்துக்கும் அதிகமான மதிப்பெண்களை பெற்றுள்ளனர்.மதிப்பெண் சான்றுமாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ்கள் விரைவில், 'டிஜிலாக்கர் போர்ட்டலில்' வெளியிடப்படும். அதை, மாணவர்கள், தங்களின் சுயவிபர எண்ணை குறிப்பிட்டு பெறலாம். அதில் சிரமம் ஏற்பட்டால், பள்ளிகளில் ஆதார் எண் வாயிலாக பெறலாம். துணைத்தேர்வுதேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில், மதிப்பெண் சரிபார்ப்பு மற்றும் மறுமதிப்பீட்டிற்கான விண்ணப்ப பதிவுகள், சி.பி.எஸ்.இ., இணையதளத்தில் விரைவில் திறக்கப்படும். ஒன்றோ அதற்கும் மேற்பட்ட பாடங்களிலோ தேர்ச்சி பெறாத மாணவர்கள், ஜூலையில் நடக்க உள்ள துணைத்தேர்வை எழுதலாம். அதற்கான வழிகாட்டுதல்கள், சி.பி.எஸ்.இ., இணையதளத்தில் வெளியாகும். சென்னை மண்டலம்சென்னை மண்டலத்தில், 49,215 மாணவர்கள், 44,862 மாணவியர் என, மொத்தம், 94,077 பேர் தேர்வெழுதினர். அவர்களில், 47,661 மாணவர்கள்; 43,965 மாணவியர் என மொத்தம், 91,626 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.அதாவது, 96.84 சதவீதம் மாணவர்கள்; 98 சதவீதம் மாணவியர் என மொத்தம், 97.39 சதவீதம் பேர், சென்னை மண்டலத்தில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை