தமிழக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு அபாயம் மத்திய நீர்வள ஆணையம் எச்சரிக்கை
சென்னை: 'தமிழக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளது' என, மத்திய நீர்வள ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கர்நாடகாவில் கொட்டி தீர்த்துவரும் மழையால், காவிரி, பெண்ணை ஆறுகளில் வெள்ளப் பெருக்கு அதிகரித்துள்ளது. சேலம் மாவட்டம், மேட்டூர் அணை நிரம்பியுள்ளதால், அதில் இருந்து காவிரி நீர் வெளியேற்றம் அதிகரித்துள்ளது. தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக, கிருஷ்ணகிரி மற்றும் திருவண்ணாமலை சாத்தனுார் அணைகளில் இருந்து, கூடுதல் நீர் திறக்கப்பட்டு வருகிறது. ஆந்திராவில் கொட்டி தீர்க்கும் மழையால், கொசஸ்தலை மற்றும் ஆரணி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பூண்டி ஏரியில் இருந்து, அதிகளவில் உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது. கேரளாவில் பெய்துவரும் மழையால், முல்லை பெரியாறு, வைகை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக, மத்திய நீர்வள ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழக அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் அறிவுறுத்தி உள்ளது.