புதுப்பிக்கத்தக்க மின்சாரம் கட்டாய கொள்முதலில் மாற்றம்
சென்னை: தமிழக மின் வாரியத்தின் மின் கொள்முதலில், சூரியசக்தியை உள்ளடக்கிய, புதுப்பிக்கத்தக்க மின்சார கட்டாய கொள்முதல் அளவில், மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மாற்றங்களை செய்துள்ளது. தமிழக மின் தேவையை, அனல், எரிவாயு என, பல வகை மின்சாரம் வாயிலாக மின் வாரியம் பூர்த்தி செய்கிறது. இதில், காற்றாலை, சூரியசக்தியை உள்ளடக்கிய, புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தின் பங்கு, குறிப்பிட்ட அளவில் கட்டாயம் இருக்க வேண்டும். இது, ஆர்.பி.ஓ., எனப்படும், 'ரினியூவபிள் பர்சேஸ் ஆப்ளிகேஷன்' என்று அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆர்.பி.ஓ., எவ்வளவு அளவு இருக்க வேண்டும் என்பதை, ஆணையம் தெரிவித்திருந்தது. அதன்படி, நடப்பு, 2025 - 26க்கு காற்றாலை மின்சார ஆர்.பி.ஓ., அளவு 3.36 சதவீதம், நீர் மின்சாரத்துக்கு 1.48 சதவீதம், நிலத்தில் அமைத்துள்ள அதிக திறன் உடைய சூரியசக்தி மின்சாரம் உள்ளிட்ட பிற வகை மின்சாரம், 28.17 சதவீதம் என, மொத்தம், 33.01 சதவீதம் நிர்ணயிக்கப்பட்டது. மேலும், 2 சதவீதம், 'பேட்டரி ஸ்டோரேஜ்' எனப்படும் மின்சாரத்தை சேமிக்கும் பேட்டரி கட்டமைப்பில் இருந்து வாங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இவற்றில் திருத்தங்களை செய்து, தற்போது, புதிய ஆர்.பி.ஓ., அளவை ஆணையம் நிர்ணயம் செய்துள்ளது. அதில், காற்றாலை மின்சார ஆர்.பி.ஓ., அளவு 1.45 சதவீதம், நீர் 1.22 சதவீதம், மேற்கூரை சூரியசக்தி மின்சாரம் 2.10 சதவீதம், அதிக திறன் சூரியசக்தி மின்சாரம் உள்ளிட்ட பிற வகை 28.35 சதவீதம் என, மொத்தம் 33.01 சதவீதம் இருக்க வேண்டும். இதேபோல், 2029 - 2030 வரை ஆண்டு வாரியாக ஆர்.பி.ஓ., அளவில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. பேட்டரி ஸ்டோரேஜ் வசதி ஏற்படுத்தப்பட்டு வருவதால், அதற்கான ஆர்.பி.ஓ., அளவில் தளர்வு செய்யப்பட்டுள்ளது.