ஐந்தாண்டு பதவிக்காலத்தை முடித்த கவர்னர்கள், 10 பேருக்கு பதிலாக புதியவர்களை நியமிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தமிழகத்துக்கு, முன்னாள் மத்திய அமைச்சர் வி.கே.சிங்கை நியமிக்க பரிசீலனை நடப்பதாக உள்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. கவர்னர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட பதவிக்காலம் என, எதுவும் வரையறை செய்யப்படவில்லை. அரசியல் சாசனத்தின் 156வது விதியின்படி, நியமனம் செய்யப்பட்ட நாளில் இருந்து ஐந்தாண்டுகள் பதவியில் இருக்கலாம்.ஆனால், ஐந்தாண்டு முடிந்ததுமே அவரது பதவி காலாவதியாகாது. ஏனென்றால், அடுத்த கவர்னரை ஜனாதிபதி நியமிக்கும் வரையில், இவரே தொடர்வார் என்றும் அதே விதி கூறுகிறது. பெரும்பாலும் மத்தியில் ஆட்சி மாறும் போது, மாநிலங்களில் கவர்னர்கள் மாற்றப்படுவது வழக்கம். எனினும், ஐந்தாண்டு முடிவதற்குள் கவர்னரை மாற்ற சட்டத்தில் இடமில்லை. மரபாக உள்ளது
எனவே, ஒரு ஆட்சியில் நியமிக்கப்பட்ட கவர்னர்கள், அடுத்த தேர்தலில் ஆட்சி மாறினால், தாமாகவே ராஜினாமா செய்வது மரபாக உருவானது. மத்தியில் ஆட்சி அமைக்கும் கட்சி, தனக்கு இசைவானவர்களை பெரும்பாலும் அக்கட்சியில் உள்ள முதியவர்களை கவர்னர்களாக நியமனம் செய்வது வாடிக்கை. மோடி தலைமையில் பாரதிய ஜனதா அரசு அமைந்த பின், அடுத்தடுத்த தேர்தல்களில் ஆட்சி மாற்றம் நிகழாததால், பெரும்பாலான கவர்னர்கள் ஐந்தாண்டு கடந்தும் பதவியில் தொடர்கின்றனர்.உதாரணமாக, தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, 2021 செப்டம்பர் 18ல் சென்னையில் பதவி ஏற்றார். முன்னதாக மேகாலயாவிலும், பின்னர் நாகாலாந்திலும் அவர் கவர்னராக பணியாற்றி இருக்கிறார். முதலாவதாக பதவியேற்றது, 2019 ஆகஸ்ட் 1. அதன்படி கணக்கிட்டால், ஐந்தாண்டுகள் நிறைவடைந்து மூன்று மாதமாகிறது. ஆனால், தமிழக கவர்னராகி மூன்றாண்டுகளே ஆகிறது. சென்னை துார்தர்ஷனில் நடந்த நிகழ்ச்சி தவறை அடுத்து, ரவியை திரும்பப்பெற வேண்டும் என, மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.நடந்த தவறுக்கும், கவர்னருக்கும் சம்பந்தம் இல்லை என துார்தர்ஷன் விளக்கம் அளித்து, தவறுக்காக மன்னிப்பு கேட்ட பிறகும், ஸ்டாலின் அதை நம்பவில்லை என்பதை உள்துறை அமைச்சகம் கவனித்துள்ளது. ஆகவே, இந்த நேரத்தில் ரவிக்கு மாற்றாக ஒருவரை நியமித்தால், அது அவருடைய மதிப்பை குறைப்பதாக தோன்றும் என்றும் மத்திய அரசு கருதுகிறது. மோடியுடன் சந்திப்பு
வேறு சில கவர்னர்களை போல ரவியையும், இன்னொரு மாநிலத்துக்கு மாற்ற வாய்ப்பிருக்கிறது; அவரது இடத்தில் முன்னாள் அமைச்சரான வி.கே.சிங் நியமிக்கப்படலாம் என, டில்லி வட்டாரங்கள் தெரிவித்தன. பல்வேறு பிரச்னைகளில், மத்திய அரசை குறை கூறி வந்த முதல்வர் ஸ்டாலின், கடந்த மாதம் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அதன்பின், சென்னை மெட்ரோ ரயில், இரண்டாம் கட்ட திட்டத்துக்கு நிதி வழங்குவது குறித்த அறிவிப்பை, மத்திய அரசு வெளியிட்டது. இதனால் மத்திய, மாநில அரசுகள் இடையே இணக்கம் உருவாகி விட்டதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டது. அதற்கேற்ப, ரவியுடன் சேர்ந்து பணியாற்றாமல் ஒதுங்கி நின்ற உயர் கல்வி அமைச்சர் பொன்முடி மாற்றப்பட்டு, கோவி.செழியன் அதில் அமர்த்தப்பட்டார்.அவர், 'கவர்னருடன் இணக்கமாகச் செயல்படுவோம்' என்று வெளிப்படையாக அறிவித்தார்; ரவியுடன் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார்.'இந்த சூழலில் தான், துார்தர்ஷன் நிகழ்ச்சியால் பரபரப்பு ஏற்பட்டது. ரவிக்கு பதிலாக சென்னை கிண்டி ராஜ்பவனில் குடியேறுவார் என எதிர்பார்க்கப்படும் விஜய் குமார் சிங் என்ற வி.கே.சிங், இந்திய ராணுவத்தின் முன்னாள் தளபதி. பிரதமர் மோடி, அமித் ஷா போன்ற மூத்த தலைவர்களுடன் நெருக்கமானவர். 2021 சட்டசபை தேர்தலின் போது, மேலிடத்தின் தமிழக இணை பொறுப்பாளராக இருந்தார்.லோக்சபா தேர்தலில் வேலுார், சிவகங்கை, கன்னியாகுமரி, திருநெல்வேலி தொகுதிகளின் தேர்தல் பொறுப்பாளராக பணியாற்றினார். அவருக்கு தமிழகத்தின் கள அரசியல் தெரியும். எனவே, அவர் பெயர் பரிசீலனையில் உள்ளதாக டில்லி வட்டாரங்கள் கூறின. - நமது நிருபர் -