எம்.ஆர்.பி., தேர்வு முறைகளில் மாற்றம் இனி மனித தவறுக்கு இடமிருக்காது
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
சென்னை: ''மருத்துவ பணியாளர் தேர்வாணையமான எம்.ஆர்.பி., தேர்வு முறைகளில் மாற்றம் கொண்டு வந்து, 4,385 பணியிடங்கள் நிரப்பப்பட்ட நிலையில், இனி மனித தவறுக்கு இடம் இருக்காது,'' என, எம்.ஆர்.பி., தலைவர் உமா மகேஸ்வரி கூறினார். டாக்டர்கள், நர்ஸ்கள் மற்றும் மருத்துவம் சார்ந்த பணியிடங்களுக்கு தேர்வு நடத்தி, தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வாணையம் நிரப்பி வருகிறது. முதலில், வினாத்தாள் முறையில் தேர்வு நடத்தப்பட்டது. பின், கணினி முறையிலான தேர்வு நடந்தது. இத்தேர்வுக்கு அதிகமானோர் விண்ணப்பிக்கும்போது, இரண்டு வேளைகளில், இரு வேறு வினாத்தாள் பயன்படுத்தி தேர்வு நடத்தப்பட்டது. அப்போது, சாதாரண வினா, கடினமான வினா, மிக கடினமான வினா என்ற அடிப்படையில் மதிப்பெண் அளிக்கப்பட்டது. இந்த முறையில் தேர்வர்கள் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து, தேர்வு முறைகளில் மாற்றம் கொண்டு வரப்பட்டு, 2,572 டாக்டர்கள், 983 மருந்தாளுனர்கள், 59 சித்தா டாக்டர்கள் உட்பட, 4,385 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. இது குறித்து, எம்.ஆர்.பி., தலைவர் உமா மகேஸ்வரி கூறியதாவது: இரண்டு வினாத்தாள் இருக்கும்போது, சாதாரண கேள்விகளுக்கு பதில் அளித்து, ஒருவர் 99 மதிப்பெண் பெற்றிருப்பார். கடினமான கேள்விகளுக்கு பதில் அளித்து, மற்றொருவர் 95 மதிப்பெண் பெற்றிருப்பார். ஆனால், சாதாரண கேள்விக்கு பதிலளித்த தேர்வருக்கு, ஒரு மதிப்பெண் குறைக்கப்படும், கடினமான கேள்விக்கு பதில் அளித்த தேர்வருக்கு, மூன்று மதிப்பெண் கூடுதலாக அளிக்கப்பட்டு, இருவருக்கும் 98 மதிப்பெண் அளிக்கப்பட்டது. இந்த முறையில் தேர்வர்கள் பாதிக்கப்பட்டு வந்தனர். இதை தவிர்க்க, தொழில்நுட்ப கல்வி இயக்ககத்துடன் இணைந்து, 20,000க்கும் மேற்பட்ட தேர்வர்கள் வந்தாலும், ஒரே வினாத்தாளில் தேர்வு நடத்தப்படுகிறது. இம்முறையால் தேர்வர்களுக்கு பாதிப்பு இல்லை. மேலும், இட ஒதுக்கீடு அடிப்படையில் இடங்கள் ஒதுக்குவது உள்ளிட்டவற்றிற்கு தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுவதால், மனித தவறுக்கு இடம் இருப்பதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.