மின்மயமாக்கல் காரணமாக ரயில் சேவையில் மாற்றம்
மதுரை: மதுரை கோட்டத்திற்குஉட்பட்ட ராமநாதபுரம் - ராமேஸ்வரம் இடையே மின்மயமாக்கல் பணி நடப்பதால் சில பாசஞ்சர் ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.மதுரை - ராமேஸ்வரம் ரயில் பாதை 161 கி.மீ., நீளம் கொண்டது. அதில் ராமநாதபுரம் வரை 107 கி.மீ.,க்கு மின்மயமாக்கல் பணிகள் முடிந்துள்ளன. உச்சிப்புளி ஐ.என்.எஸ்., பருந்து கடற்படை விமான ஓடுதளம் அருகே 220 மீ.,க்கு தண்டவாளத்தின் மேல் 25 கி.வோல்ட் மின்கம்பிகள்அமைத்தால் தகவல் தொடர்பு சாதனங்களுக்கு சிக்கல் ஏற்படும் என கடற்படை சார்பில் எதிர்ப்பு எழுந்தது. இதனால் மின்மயமாக்கல் பணிகளில் தாமதம் ஏற்பட்டது.இதன் காரணமாக மதுரை - ராமேஸ்வரம் ரயில்கள் டீசல் இன்ஜின்மூலமே தற்போது இயக்கப்படுகின்றன. வந்தே பாரத் போன்ற ரயில்களை ராமேஸ்வரத்தில் இருந்து இயக்க முடியாத சூழல் நிலவியது.ரயில்வே தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, ஐ.என்.எஸ்., பருந்து பரிந்துரையின் பேரில் 220 மீ., பகுதியில் மட்டும் நிலத்திற்கடியில் மின்சார கேபிள்கள் செல்லும் வகையில் மாற்றங்கள் செய்யப்பட்டன. மின்சார ரயில் இன்ஜினின் உந்து விசை மூலம் அப்பகுதியை ரயில்கள் கடக்கும். மனிதர்களோ, கால்நடைகளோ குறுக்கே வந்தால் ரயில் நடுவழியில் நிற்க நேரிடும். அச்சமயம் மின்சார இன்ஜின் 220 மீ., பகுதியை முழுமையாக கடக்க 'பேங்கர்' எனும் டீசல் இன்ஜின் மூலம் தள்ளப்படும். இதையும் தவிர்க்க 220 மீ., நீளத்திற்கு தடுப்பு வேலிகள் அமைக்கப்படுகின்றன.இதையடுத்து ராமநாதபுரம் - ராமேஸ்வரம் இடையே 54 கி.மீ., நீளத்திற்கு மின்மயமாக்கல் பணிகள் தற்போது முழுவீச்சில் நடந்து வருகின்றன. இதன் காரணமாக ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.* மதுரையில் இருந்து தினமும் காலை 6:50 மணிக்கு புறப்படும் ராமேஸ்வரம் பாசஞ்சர் (56711) ஜூலை 7 முதல் 31 வரை (சனி, ஞாயிறு, ஜூலை 23, 24 தவிர்த்து) ராமநாதபுரம் வரை மட்டும் இயக்கப்படும். ராமநாதபுரம் - ராமேஸ்வரம் இடையே ரத்து செய்யப்படுகின்றன.* ராமேஸ்வரத்தில் இருந்து காலை 11:40 மணிக்கு புறப்படும் மதுரை பாசஞ்சர் (56714) ஜூலை 7 முதல் 31 வரை (சனி, ஞாயிறு, ஜூலை 24 தவிர்த்து) முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன.பயணிகள் வசதிக்காக சிறப்பு ரயில் (06714) ஜூலை 7 முதல் 31 வரை (சனி, ஞாயிறு, ஜூலை 23, 24 தவிர்த்து) ராமநாதபுரத்தில் இருந்து மதியம் 3:50 மணிக்கு புறப்பட்டு மாலை 5:50 மணிக்கு மதுரை வரும்.