சென்னை:சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில், தி.மு.க., முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக், அவரது மனைவி, சகோதரர், திரைப்பட இயக்குனர் அமீர் உள்ளிட்டோருக்கு எதிராக, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக்கை, என்.சி.பி., எனும் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவினர், டில்லியில் மார்ச்சில் கைது செய்தனர். அவருக்கு எதிராக குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது. ஜாபர் சாதிக்குடன் தொடர்பில் இருந்த, திரைப்பட இயக்குனர் அமீரிடம், மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதையடுத்து, இந்த விவகாரத்தில் அமலாக்கத் துறையும் நுழைந்தது. சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்ததாக கூறி, ஜாபர் சாதிக், அமீர் வீடு, அலுவலகங்களில், அமலாக்கத் துறை சோதனை நடத்தியது.இந்நிலையில், போதைப் பொருட்கள் விற்பனை வாயிலாக கிடைத்த பணத்தை சட்ட விரோதமாக பரிமாற்றம் செய்ததாகக் கூறி, ஜாபர் சாதிக், அவரது சகோதரர் முகமது சலீம் ஆகியோர் மீது, அமலாக்கத் துறை தனியாக ஒரு வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில், ஜூன் 26ல் ஜாபர் சாதிக், ஆக., 12ல் முகமது சலீம் ஆகியோரை அமலாக்கத் துறை கைது செய்தது. இருவரையும் காவலில் எடுத்து விசாரணையும் நடத்தியது. தற்போது, இருவரும் நீதிமன்ற காவலில் உள்ளனர்.தற்போது வழக்கில் விசாரணை முடிவடைந்து, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், ஜாபர் சாதிக், அவரது மனைவி அமீனா பானு, சகோதரர் முகமது சலீம் உள்பட. 12 பேர் மீது, அமலாக்கத் துறை சார்பில் சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளார்.இதில் 12வது நபராக அமீர் சேர்க்கப்பட்டுள்ளார். இது தவிர, ஜாபர் சாதிக்கின் பட தயாரிப்பு நிறுவனம் உள்பட எட்டு நிறுவனங்களும் சேர்க்கப்பட்டுள்ளன.சட்டவிரோதமாக கிடைத்த பணத்தில், இந்த நிறுவனங்கள் வாயிலாக ஏராளமான சொத்துகளை வாங்கி குவித்துள்ளதால், அந்த சொத்துக்களை பறிமுதல் செய்ய உத்தரவிட வேண்டும் எனவும், குற்றப்பத்திரிகையில் அமலாக்கத் துறை கோரியுள்ளது.