உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மது பாட்டில்கள் கடத்தலை தடுக்க 45 இடங்களில் செக் போஸ்ட்

மது பாட்டில்கள் கடத்தலை தடுக்க 45 இடங்களில் செக் போஸ்ட்

சென்னை:'அண்டை மாநிலங்களில் இருந்து, தமிழகத்திற்கு சட்ட விரோதமாக மது பாட்டில்கள் கடத்தப்படுவதை தடுக்க, 17 மாவட்டங்களில், 45 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன' என, போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.இதுகுறித்து, அமலாக்க பணியகக் குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:சட்ட விரோத மதுபானங்கள் விற்பனை, கடத்தல் மற்றும் கள்ளச்சாராயம் காய்ச்சுவது உள்ளிட்ட குற்றங்கள் தொடர்பாக, பொது மக்கள் புகார் அளிக்க, கட்டணமில்லா, 10581 என்ற தொலைபேசி எண்ணும், 94984 10581 என்ற, 'வாட்ஸாப்' எண்ணும் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன.இவற்றின் வாயிலாக, 10 மாதங்களில், 2,700க்கும் மேற்பட்ட புகார்கள் பெறப்பட்டு விசாரணை நடக்கிறது. சட்டவிரோத மதுபானங்கள் மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக, உள்ளாட்சி அமைப்பு அதிகாரிகள் வாயிலாகவும் தகவல் திரட்டி வருகிறோம். இங்கு விலை அதிகம் என்பதால், அண்டை மாநிலங்களில் இருந்து, அதிகமான மது பாட்டில்கள் கடத்தி வரப்படுகின்றன. கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில், வெளிநாட்டு மது வகைகள் என, போலியாக தயாரிக்கப்பட்ட சரக்குகளும், தமிழகத்திற்கு கடத்தி வரப்படுகின்றன.இதனால், அண்டை மாநில எல்லைகளில் ஆய்வு செய்யப்பட்டு, தமிழகம், கேரளா, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் இருந்து, மது பாட்டில்கள் மற்றும் போதைப் பொருள் கடத்துவதற்கு ஏதுவான சாலைகள் அடையாளம் காணப்பட்டு உள்ளன.அதன் அடிப்படையில், கோவை, கிருஷ்ணகிரி, விழுப்புரம் என, 17 மாவட்டங்களில் நிரந்தரமாக, 45 சோதனை சாவடிகள் அமைத்து உள்ளோம். அங்கு, 24 மணி நேரமும் சுழற்சி முறையில், போலீசார் பணியமர்த்தப்பட்டு உள்ளனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ