2 வயதில் 11 சாதனைகள் சென்னை சிறுவன் அசத்தல்
சென்னை:தமிழகத்தை சேர்ந்த, 2 வயது சிறுவன் சஞ்சய் கார்த்திகேயன், உலக அளவிலான, 11 சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து அசத்தி உள்ளான். செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவரது மனைவி திவ்யா. இவர்களின் 2 வயது மகன் சஞ்சய் கார்த்திகேயன். இச்சிறுவன், குழந்தை களுக்கான சிக்கலான புதிர் களை தீர்ப்பது; தேச பக்தி பாடல்களை குறிப்பிட்ட நேரத்திற்குள் ஒப்புவிப்பது; நிறங்களை பிரித்து அறிவது உள்ளிட்ட பிரிவுகளில் வென்று, 'நோபல் வேர்ல்டு ரெக்கார்ட்ஸ், இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்' உட்பட, 11 உலக அளவிலான சாதனை புத்தகங்களில் இடம் பிடித்துள்ளான். சென்னையின் சிறிய அதிசயம், மேதை குழந்தை, சூப்பர் டேலண்டட் கிட், உலகின் இளைய சாதனையாளர் என, பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளான்.இதுகுறித்து சிறுவனின் தாயார் கூறியதாவது: என் மகன், 2 வயதில் 11 சாதனை புத்தகங்களில் இடம் பிடித்திருப்பது மகிழ்ச்சி. தற்போது, 195 நாடுகளின் கொடி பெயர்களை ஒப்புவிக்கும் போட்டியில், குழந்தைகளுக்கான பிரிவில் பங்கேற்று, 6 நிமிடம் 11 வினாடியில் வென்றுள்ளான். இதைத்தொடர்ந்து, 12வது சாதனையாக, 'இன்டர்நேஷனல் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்' புத்தகத்தில் இடம்பெற உள்ளான். முறையான முன்பருவ கல்வி கிடைத்தால், அனைத்து குழந்தைகளும் சாதனையாளர்களே.இவ்வாறு அவர் கூறினார்.