சென்னை - கடலுார் ரயில் பாதை ரூ.52 கோடி ஒதுக்கீடு
சென்னை:'சென்னை - மாமல்லபுரம் - புதுச்சேரி - கடலுார், புதிய ரயில் பாதை திட்டத்துக்கு, 52 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளதால், ஆரம்ப கட்ட பணிகள் துவக்கப்படும்' என தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.'சென்னையில் இருந்து கடலோரமாக ரயில் பாதை அமைத்தால், போக்குவரத்து நெரிசல் குறையும்; பொருளாதார வளர்ச்சி ஏற்படும்' என, ரயில்வே திட்டமிட்டது. அந்த வகையில், சென்னை - மாமல்லபுரம் - புதுச்சேரி - கடலுாருக்கு, 179 கி.மீ., துாரத்துக்கு புதிய ரயில் பாதை அமைக்க, 2007ல் ரயில்வே ஒப்புதல் அளித்தது. இதற்கான ஆரம்ப கட்ட 'சர்வே' பணிகளும் நடந்தன. அதன்பின், எந்த பணியும் இல்லாமல் முடங்கி விட்டது. இத்திட்டத்திற்கு போதிய நிதி ஒதுக்கீடு இல்லாததால், நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல் இருந்து வருகிறது. இதனால், திட்டப் பணியில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருந்தது. காலதாமதம் காரணமாக, திட்ட மதிப்பீடு 523 கோடி ரூபாயில் இருந்து, 1,200 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இந்நிலையில், மத்திய பட்ஜெட்டில், 52 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்திருப்பது, திட்டத்திற்கு புத்துயிர் அளித்து உள்ளது.இது குறித்து, ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: சென்னை - மாமல்லபுரம் - புதுச்சேரி - கடலுார் ரயில் திட்டம் மிகவும் முக்கியமானது. இந்த ரயில் திட்டத்தை செயல்படுத்தும்போது, வரும் காலத்தில், சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் ரயில் பாதையை, இணைக்கும் ரயில் பாதையாக உருவாகலாம். ஆனால், பெரிய அளவில் நிதி தேவைப்படுகிறது. முந்தைய பட்ஜெட்டில் 1,000 ரூபாய் மட்டுமே ஒதுக்கிய நிலையில், நடப்பாண்டு பட்ஜெட்டில் 52 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், திட்டத்துக்கான ஆரம்ப கட்ட பணிகளை மேற்கொள்ள உள்ளோம். இந்த திட்டத்தை விரைந்து நிறைவேற்ற, ரயில்வே உடன், தமிழகம் மற்றும் புதுச்சேரி அரசு, நிதி பங்களிப்பு வழங்கினால், பணிகளை வேகமாக முடிக்க முடியும். இந்த திட்டம் பயன்பாட்டிற்கு வரும்போது, தமிழகத்தில் பயணியர் ரயில்கள் மட்டுமின்றி, சரக்கு ரயில்களின் சேவையையும் அதிகரிக்க முடியும்.