உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விதிமீறல் கட்டடங்களால் கான்கிரீட் காடான சென்னை

விதிமீறல் கட்டடங்களால் கான்கிரீட் காடான சென்னை

சென்னை : விதிமீறல் கட்டடங்களால், 'கான்கிரீட்' காடாக சென்னை நகரம் மாறி விட்டது என்றும், அதனால் தான் மழை காலங்களில் வெள்ள பாதிப்பை சந்திப்பதாகவும், சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.சென்னையில் விதிமீறல் கட்டுமானம் தொடர்பாக, கட்டடத்துக்கு, 'சீல்' வைக்கவும், இடிக்கவும், மாநகராட்சி தரப்பில் கடந்த நவம்பர் 5ல், 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டது. இதற்கு, கட்டட உரிமையாளர் சாந்தி என்பவர் விளக்கம் அளித்தார்; அதை மாநகராட்சி நிராகரித்தது.இதையடுத்து, வீட்டுவசதித்துறை செயலரிடம் நவ., 26ல் முறையீடு செய்தார். தன் விண்ணப்பத்தை குறிப்பிட்ட அவகாசத்துக்குள் பைசல் செய்யவும், அதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று கேட்டும், உயர் நீதிமன்றத்தில் சாந்தி மனு தாக்கல் செய்தார்.

ஆஜர்

இம்மனு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், வி.லட்சுமிநாராயணன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வீட்டுவசதித்துறை சார்பில் வழக்கறிஞர் ஏ.எம்.அய்யாதுரை, மாநகராட்சி சார்பில் வழக்கறிஞர் ரமேஷ் ஆஜராகினர்.

நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

அரசிடம் விண்ணப்பித்த உடன், இந்த வழக்கை மனுதாரர் தாக்கல் செய்துள்ளார். பிரச்னையை ஆராய அதிகாரிகளை அனுமதிக்காமல், இப்படி வழக்கு தொடரும் நடைமுறையை ஊக்குவிக்க முடியாது. விண்ணப்பத்தை பரிசீலிக்க அதிகாரிகளுக்கு உரிய அவகாசம் வழங்க வேண்டும். அனுமதி பெறாத கட்டுமானங்களை இடிப்பதில் இருந்து தப்பிக்கவும், பிரச்னையை இழுத்தடிக்கவுமே வழக்கு தொடர்கின்றனர்.

அவகாசம்

விதிகளை மீறி கட்டப்பட்ட ஏராளமான கட்டுமானங்களால், சென்னை நகரம் கான்கிரீட் காடாகி விட்டது. இத்தகைய கட்டட விதிமீறல்களால், மழை காலங்களில் நகரமே வெள்ள அபாயத்தை எதிர்கொள்கிறது. அதிகாரிகளும், சட்டவிரோத கட்டுமானங்கள் மீது துவக்க நிலையிலே தகுந்த நடவடிக்கை எடுப்பது இல்லை.நீதிமன்ற உத்தரவுகள் பல இருந்தும், மாநகராட்சி அதிகாரிகள் அல்லது உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரிகள், திட்ட அனுமதியை மீறி சட்டவிரோதமாக கட்டப்படும் கட்டுமானங்கள் மீது நடவடிக்கை எடுப்பது இல்லை. அவர்களின் நடவடிக்கையின்மை, ஊழல் நடவடிக்கைகளால், பொதுமக்களுக்கு தான் அசவுகரியம் ஏற்படுகிறது. மக்களின் அடிப்படை உரிமைகளிலும் மீறல் ஏற்படுகிறது.இத்தகைய கட்டட விதிமீறல்களால் அருகில் வசிப்பவர்களுக்கு மட்டுமின்றி, பொது மக்களுக்கும் ஆபத்து உள்ளது. எனவே, உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்காமல் விதிமீறல் செய்பவர்களுக்கு உதவுவதை விட, சட்டத்தை கண்டிப்புடன் அதிகாரிகள் அமல்படுத்த வேண்டும்.இந்த வழக்கை பொறுத்தவரை, அரசிடம் முறையீடு செய்து, 30 நாட்களுக்குள் வழக்கு தொடரப்பட்டுள்ளது. பிரச்னையை ஆராய, அதிகாரிகளுக்கு அவகாசம் வேண்டும். விண்ணப்பத்தை விரைந்து பைசல் செய்யும்படி, வீட்டுவசதி துறையை தான் மனுதாரர் அணுக வேண்டும்; மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

ஆரூர் ரங்
ஜன 01, 2025 12:16

எட்டு ஆண்டுகளுக்கு முன் சென்னை தி நகர் உஸ்மான் சாலை, ரெங்கநாதன் தெரு பகுதியில் சுமார் 100 விதிமீறல் கட்டிடங்களை இடித்துத் தள்ள கோர்ட் உத்தரவு .பிறகு தீபாவளி வரை தள்ளிவைப்பு. இப்போ 7 தீபாவளிகள் கடந்துவிட்டன. 2 விபத்துகள் நடந்துவிட்டன. ஒரு கட்டிடம் கூட அகற்றப்படவில்லை. அசம்பாவிதம் ஏற்பட்டால் அப்பகுதிக்குள் ஆம்புலன்ஸ் தீயணைப்பு வண்டிகள் கூட செல்ல முடியாது. உறக்கம் தெளியட்டும்.


chennai sivakumar
ஜன 01, 2025 08:20

காலத்திற்கு ஒவ்வாத விதிமுறைகள். அதனை செயல் படுத்துவதில் முறையாக பணி செய்வது இல்லை. போதாக்குறைக்கு நிலத்தின் விலை ராக்கெட் வேகத்தில் ஏற்றம். இதுக்கு ஒரே தீர்வு சென்னை தலைநகராக இருக்க கூடாது. அப்படியே இருக்க வேண்டும்.என்றால் மகாபலிபுரம், திருபெரும்புதுர் சைடில் மாற்றினால் மட்டுமே ஓரளவு விடிவு. இல்லை என்றால் பெருகி வரும் கட்டுக்கடங்காத மக்கள் தொகை, எல்லோரும் சென்னைக்கு படை எடுப்பு போன்றவை சேர்ந்து மும்பை மாதிரி ஆகிவிடும் நாட்கள் வெகு தூரத்தில் இல்லை. மும்பையிலிருந்து பெங்களூருக்கு வந்து அதுவும் இப்போது பெங்களூறும் டோடல் கான்கிரீட் காடு ஆக மாறி விட்டது.


Kasimani Baskaran
ஜன 01, 2025 07:57

சென்னையின் பழைய மேப் என்ன சொல்கிறது என்று பார்த்தால் நூற்றுக்கணக்கில் ஏரிகளை ஆக்கிரமித்து இருப்பது தெரியும்.


அப்பாவி
ஜன 01, 2025 07:18

விதிகளுடன் கட்டுனா நீதிபதிகளுக்கே இடமிருக்காது.


M.Srinivasan
ஜன 01, 2025 06:23

சென்னை மட்டுமல்ல... புதுச்சேரியும் பின்பற்றுவதில்லை. மழை காலத்தில் புதுச்சேரியும் மிதக்கிறது.


rama adhavan
ஜன 01, 2025 06:45

அப்போ நீங்க ஒரு பொது நல வழக்கு போட்டு பாருங்கள்.