உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தொடர் விடுமுறையால் சென்னை - மதுரைக்கு ரூ.4,200 ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம்

தொடர் விடுமுறையால் சென்னை - மதுரைக்கு ரூ.4,200 ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம்

சுதந்திர தினத்தையொட்டி மூன்று நாள் விடுமுறை உள்ளதால், சென்னை - மதுரை இடையே ஆம்னி பஸ்களில் 4,000 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இன்று ஆக.,15 சுதந்திர தினத்தை தொடர்ந்து சனி, ஞாயிறு வார விடுமுறை என மூன்று நாட்கள் விடுமுறை கிடைப்பதால், சென்னையில் இருந்து தென்மாவட்டத்தினர் ஏராளமானோர் சொந்த ஊருக்கு செல்கின்றனர். இதையொட்டி, அரசு போக்குவரத்துக் கழகங்கள், தென்மாவட்டங்களில் இருந்து கூடுதல் சிறப்பு பஸ்களை அனுப்பியுள்ளன. மதுரை கோட்டத்தில் இருந்து மட்டும் 120 பஸ்கள் சென்றுள்ளன. இதில் சென்னை - மதுரை கட்டணம் 395 ரூபாய். இதேபோல அரசு விரைவு போக்குவரத்துக் கழக பஸ்களில் கட்டணம் 435 ரூபாய். அதேசமயம் ஆம்னி பஸ்களிலோ கட்டணம், 1,000 ரூபாய் முதல், 4,200 வரை எகிறியுள்ளது. ஆம்னி பஸ் உரிமையாளர் சங்க நிர்வாகி ராஜா கூறுகையில், ''விடுமுறை நாட்கள் என்பதால் அரசு நிர்ணயித்த கட்டணத்திற்குள்தான் 2,000 ரூபாய் வரை வசூலிக்கின்றனர். அதேபோல இந்நாட்களில், மதுரையில் இருந்து சென்னை செல்ல கட்டணம் வழக்கமான கட்டணமே வசூலிக்கப்படுகிறது. சீட்களும் காலியாக உள்ளன,'' என்றார். மதுரை போக்குவரத்து துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'அரசு பஸ்களில் அதிகபட்சம் 30,000 பேர் வரை பயணிக்கலாம். ஆனால் இதுபோன்ற தொடர் விடுமுறை நாட்களில் பல லட்சம் பேர் வருவர். அவர்களில் பலர் ஒரே நேரத்தில் ஆம்னி பஸ்களை நாடுவதால் பல ஆயிரம் ரூபாய் வசூலிக்கின்றனர்' என்றார். வட்டார போக்குவரத்து அதிகாரிகள் கூறுகையில், 'விடுமுறை நாட்களையொட்டி ஆம்னி பஸ்களில் சோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கூடுதல் பணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை