உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கோவையில் ஐ.டி., பூங்கா திறந்தார் முதல்வர்

கோவையில் ஐ.டி., பூங்கா திறந்தார் முதல்வர்

கோவை:'தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை சார்பில், கோவை விளாங்குறிச்சி, 'எல்காட்' வளாகத்தில், 158.32 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள தகவல் தொழில்நுட்ப பூங்கா கட்டடத்தை, முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.தொடர்ந்து, துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியை அவர் பார்வையிட்டார்.

வேலைவாய்ப்பு

பின், திறந்து வைக்கப்பட்ட கட்டடத்தில், பல்வேறு நிறுவனங்களுக்கு இட ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான ஆணைகளை முதல்வர் வழங்கினார்.நிகழ்ச்சியில், தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசுகையில், ''கோவையில் தொழில்நுட்ப பூங்கா கட்ட, 2020-ல் திட்டமிடப்பட்டது. கடந்த ஆட்சியிலேயே முடிக்கப்பட்டிருக்க வேண்டும். ''தற்போது உச்ச நீதிமன்ற உத்தரவை பெற்றே கட்டடம் முடிக்கப்பட்டுள்ளது. எல்காட் வளாகத்தில், 2.94 லட்சம் சதுரடி பரப்பில் கட்டப்பட்டுள்ள இந்த தொழில்நுட்ப பூங்கா வாயிலாக, 3,500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்,'' என்றார்.இரண்டு நாட்கள் கோவையில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, விமானத்தில் நேற்று கோவை வந்த முதல்வர் ஸ்டாலினுக்கு, விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

வரவேற்பில் நெகிழ்ச்சி

இதில், பூரிப்படைந்த முதல்வர் ஸ்டாலின், தன் சமூக வலைதள பக்கத்தில், 'நல்லா இருக்கீங்களா தலைவரே...' என, கோவை விமான நிலையம் முதல் எல்காட் வரை திரண்டிருந்த மக்களின் வரவேற்பு; அந்த, 4 கி.மீ., துாரத்தை கடக்க ஒரு மணி நேரமானது; கோவை மக்களின் அன்பு' என, குறிப்பிட்டு, ஹார்ட் சிம்பல் பதிவிட்டுள்ளார்.கோவையின் உற்சாக வரவேற்பில் நெகிழ்ந்துள்ள அவர், தன் மகிழ்ச்சியை இவ்வாறு பகிர்ந்திருக்கிறார்.

தற்போது புதிதாக துவங்கப்பட்டுள்ள தகவல் தொழில்நுட்ப பூங்கா, உடனடியாக செயல்பாட்டிற்கு வர உள்ளது. இதன் வாயிலாக, 3,500 பேருக்கு வேலை கிடைக்கும். இரு நிறுவனங்களுக்கு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. ஏழு நிறுவனங்கள் வரை உடனடியாக வர உள்ளன. டிசம்பர் இறுதிக்குள் முழுதும் நிரம்பி விடும். வளாகத்தின் அருகே, 17.17 ஏக்கர் நிலம் உள்ளது. இதில், 26 லட்சம் சதுரடி பரப்பில் இரு, 'டவர்'களை, 2,000 கோடி ரூபாய் மதிப்பில் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான அனுமதி கோரப்பட்டுள்ளது. முதல்வர் அனுமதி அளித்ததும் பணிகள் உடனடியாக துவங்கப்படும். இதன் வாயிலாக, 35,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

புதிதாக துவங்கப்பட்டுள்ள தகவல் தொழில்நுட்ப பூங்காவில், ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கும் வாய்ப்பளிக்க உள்ளோம். ஒருவருக்கு மட்டுமே கொடுக்காமல், பல்வேறு நிறுவனங்களுக்கு பிரித்து வழங்க திட்டமிட்டுள்ளோம். கோவையில் தகவல் தொழில்நுட்பத்துக்கு பெரியளவில் வாய்ப்புகள் உள்ளன.-கண்ணன், எல்காட் நிர்வாக இயக்குனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை