சென்னை,: ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில், 36 கோவில்களில், 592.38 கோடி ரூபாய் மதிப்பிலான, 43 புதிய திட்டப் பணிகளுக்கு, முதல்வர் ஸ்டாலின் நேற்று, 'வீடியோ கான்பரன்ஸ்' வழியே அடிக்கல் நாட்டினார்.திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் பவானியம்மன் கோவில்; பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில்; கடலுார் மாவட்டம், வடலுார் வள்ளலார் சர்வதேச மையம்; விருதுநகர் மாவட்டம் இருக்கன்குடி மாரியம்மன் கோவில்; சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில்; திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவில்.மதுரை அழகர் கோவில்; காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான பள்ளி; நாமக்கல் நரசிம்மசுவாமி கோவில்; கும்பகோணம் நாகேஸ்வர சுவாமி கோவில். சென்னை பூங்கா நகர் முத்துக்குமார சுவாமி கோவில்; கோவை மாவட்டம் மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் உட்பட, 36 கோவில்களில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.புதிய ராஜகோபுரம், திருமண மண்டபங்கள், பக்தர்கள் தங்கும் விடுதி, வணிக வளாகங்கள், பக்தர்கள் இளைப்பாறும் மண்டபம், பல்நோக்கு மண்டபம், வசந்த மண்டபம். முடி காணிக்கை மண்டபம், கலையரங்கம், அர்ச்சகர் மற்றும் பணியாளர் குடியிருப்பு; பள்ளி மற்றும் கல்லுாரி வகுப்பறை கட்டடங்கள், ஓதுவார் பயிற்சிப் பள்ளி மற்றும் பெண்கள் தங்கும் விடுதி போன்றவை கட்டப்பட உள்ளன.அடிக்கல் நாட்டு நிகழ்ச்சியில், அமைச்சர் சேகர்பாபு, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை செயலர் மணிவாசன், ஹிந்து சமய அறநிலையத்துறை சிறப்பு பணி அலுவலர் குமரகுருபரன், கமிஷனர் முரளீதரன் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.