நீரில் மூழ்கி இறந்தவர் குடும்பத்திற்கு முதல்வர் நிவாரணம்
சென்னை:கன்னியாகுமரி தடுப்பணைக்குள் விழுந்த இருவரை காப்பாற்றி விட்டு, நீரில் மூழ்கி இறந்தவர் குடும்பத்திற்கு, 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.அவரது அறிக்கை:கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு அடுத்த குழித்துறையை சேர்ந்தவர் பீட்டர் ஜான்சன். அங்குள்ள தடுப்பணையின் மேல்பகுதியில் படிக்கட்டில் நின்று குளிப்பது வழக்கம். இவர், கடந்த 1ம் தேதி குளிக்க சென்ற போது, தடுப்பணையில் நடந்து சென்ற நல்லுார் பகுதியை சேர்ந்த மனோ, 17 மற்றும் அகிலேஷ், 12 என்ற இருவர் தவறி விழுந்துள்ளனர். இதை கவனித்த பீட்டர் ஜான்சன், தடுப்பணையில் இறங்கி, இருவரையும் காப்பாற்றி கரை ஏற்றியுள்ளார். அதன்பின், எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி அவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தில் தன் உயிரையும் பொருட்படுத்தாமல், இரண்டு இளைஞர்களை காப்பாற்றி, தன் உயிரை பீட்டர் ஜான்சன் தியாகம் செய்துள்ளார். அவரது துணிச்சல் மற்றும் தியாக உணர்வை போற்றும் வகையில், அவரது குடும்பத்திற்கு முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து, 10 லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளேன்.