தமிழகத்தில் முதியோருக்காக அன்புச்சோலை மையங்கள்
திருச்சி: தமிழகம் முழுதும் முதியோரை பராமரித்து பாதுகாக்கும் வசதிகள் அடங்கிய, 25 அன்புச்சோலை மையங்களை, முதல்வர் ஸ்டாலின் திருச்சியில் நேற்று துவக்கி வைத்தார். தமிழக சமூக நலத்துறை சார்பில், முதியோரின் நலன்களை பாதுகாக்கும் வகையில், அன்புச்சோலை எனும் பகல் நேர பராமரிப்பு மையங்கள், 25 இடங்களில் கட்டப்பட்டு உள்ளன. 10 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட இந்த மையங்களை, முதல்வர் ஸ்டாலின் திருச்சியில் இருந்து, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நேற்று துவக்கி வைத்தார். இந்த மையங்களில் முதியோருக்கு நுாலகம், யோகா பயிற்சி, பிசியோதெரபி, பொழுதுபோக்கு அம்சங்கள் ஆகிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும், இந்த மையங்களுக்கு வரும் முதியோருக்கு, தனியார் உதவியுடன் மதிய உணவு, சிற்றுண்டி வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருச்சி பொன்மலைப்பட்டி அன்புச்சோலை மையத்தை திறந்து வைத்து பார்வையிட்ட முதல்வர் ஸ்டாலின், அங்கு முதியோருடன் கேரம் விளையாடி மகிழ்ந்தார். அவர்களிடம் சிறிது நேரம் உரையாடி விட்டு, பின் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.