உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தேர்தல் ஆணையம் மீது முதல்வர் ஸ்டாலின் அடுக்கடுக்காக... குற்றச்சாட்டு! : வாக்காளர் பட்டியல் திருத்தம் இடியாப்ப சிக்கல் என விளாசல் தி.மு.க., வெற்றியை தடுக்க பா.ஜ., சூழ்ச்சி செய்வதாகவும் புகார்

தேர்தல் ஆணையம் மீது முதல்வர் ஸ்டாலின் அடுக்கடுக்காக... குற்றச்சாட்டு! : வாக்காளர் பட்டியல் திருத்தம் இடியாப்ப சிக்கல் என விளாசல் தி.மு.க., வெற்றியை தடுக்க பா.ஜ., சூழ்ச்சி செய்வதாகவும் புகார்

சென்னை:'வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிக்காக வழங்கப்படும் படிவத்தை பார்த்தாலே தலை சுற்றுகிறது. மொத்தத்தில் இப்பணி இடியாப்ப சிக்கலாக உள்ளது' என, தேர்தல் கமிஷன் மீது முதல்வர் ஸ்டாலின் அடுக்கடுக்காக குற்றம் சாட்டியுள்ளார். அத்துடன், வரும் சட்டசபை தேர்தலில், தி.மு.க.,வின் வெற்றியை தடுக்க, பா.ஜ., சூழ்ச்சி செய்வதாகவும் புகார் தெரிவித்துள்ளார். 'வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தை ஏன் எதிர்க்கிறோம்?' என்ற தலைப்பில், 'வீடியோ' ஒன்றை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகள் துவங்கி விட்டன. வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யப்படுவதை நாம் எதிர்க்கவில்லை; ஆனால், போதுமான அவகாசம் தராமல், அவசரமாக செய்வது சரியாக இருக்காது. தேர்தல் கமிஷனுடன் கூட்டு சேர்ந்து, வாக்காளர் பட்டியலில் பா.ஜ., எப்படி மோசடி செய்திருக்கிறது என, ராகுல் ஏற்கனவே விளக்கி இருக்கிறார்.

ஆர்ப்பாட்டம்

கேரள முதல்வர் பினராயி விஜயன், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோரும் சிறப்பு திருத்தத்தை எதிர்க்கின்றனர். நாம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறோம். நாளை, அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். ஒரு படிவம் கொடுத்து, முதலில் நம் விபரங்களை கேட்கின்றனர். அடுத்து, முந்தைய வாக்காளர் பட்டியலில் நம் உறவினரின் விபரம் கேட்கப்பட்டுஇருக்கிறது. உறவினர் என்றால் யார் என்பதில் தெளிவு இல்லை. வாக்காளரின் உறவினர் பெயர் என்று சொல்லப்பட்டிருக்கும் இடத்தில், முதலில் பெயர், இரண்டாவதாக வாக்காளரின் புகைப்பட அடையாள அட்டை எண் கேட்கப்பட்டிருக்கிறது. மூன்றாவதாக மீண்டும் உறவினர் பெயர் கேட்கப்பட்டுள்ளது. முதலில் யார் பெயரை எழுத வேண்டும்; விண்ணப்பதாரர் பெயரா அல்லது உறவினர் பெயரா என்ற குழப்பம் ஏற்படுகிறது. சிறிய தவறு இருந்தாலும், அந்த படிவத்தை தேர்தல் கமிஷன் ஏற்காமல், வாக்காளர் பட்டியலில் இருந்து பெயரை நீக்கும் ஆபத்து இருக்கிறது. நன்றாக படித்தவர்கள் கூட, இந்த படிவத்தை பார்த்தால், அவர்களுக்கு தலை சுற்றி விடும். படிவத்தில் வாக்காளரின் புகைப்படத்தை அச்சிட்டு, தற்போதைய புகைப்படத்தை ஒட்டவும் என்று சொல்லப்பட்டு உள்ளது. ஆனால், மாநில தலைமை தேர்தல் அதிகாரி, 'விருப்பமிருந்தால் ஒட்டலாம்' என, அரசியல் கட்சிகள் பங்கேற்ற கூட்டத்தில் சொல்லி இருக்கிறார். இது, இன்னொரு இடியாப்ப சிக்கல். ஒரு வேளை போட்டோ ஒட்டவில்லை என்றால், ஓட்டுரிமை பறிக்கப்படுமா என்பது, வாக்காளர் பதிவு அதிகாரி கையில் உள்ளது. அவர்கள் அனைவரும் ஒரே மாதிரியான முடிவை எடுப்பர் என்று சொல்ல முடியாது. இவ்வாறு, முதல் கோணல் முற்றிலும் கோணல் என்ற கதையாக, அனைத்து இடத்திலும் குழப்பம் தான். எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த சில அதிமேதாவிகள், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணியை நடைமுறைப்படுத்துவது, மாநில அரசின் பணியாளர்கள் தானே; பின்னர் ஏன் தி.மு.க., எதிர்க்க வேண்டும் என்கின்றனர்.

தவறான தகவல்

ஒரு பணியாளரை தேர்தல் கமிஷன், தன் பணிக்காக எடுத்த வினாடியில் இருந்தே, அவர் தேர்தல் கமிஷனுக்கு கட்டுப்பட்டு செயல்படுவார்; மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்க மாட்டார். மக்களை திசை திருப்பினால் போதும் என தவறான தகவலை பரப்பக்கூடாது. ஓட்டுச்சாவடி அலுவலர்கள் வருவதில்லை; வந்தாலும் போதிய அளவில் கணக்கீட்டு படிவங்களை கொண்டு வருவதில்லை. ஒரு நாளைக்கு, 30 படிவங்களுக்கு மேல் தருவதில்லை. இந்த லட்சணத்தில், ஒரு தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலர், மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட படிவங்களை, குறுகிய கால அவகாசத்தில் எவ்வாறு கொடுத்து வாங்குவார்? வாங்கினாலும், அதை கணினிமயமாக்கி, வரும் டிசம்பர் 7ம் தேதியன்று வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டும். போகிற போக்கை பார்த்தால், அதிக அளவிலான வாக்காளர்கள் நீக்கப்படுவர் என்ற அச்சம் உறுதியாகிறது. ஓட்டுச்சாவடி அலுவலர்கள் இப்பணியை சரியாக செய்யாவிட்டால், இந்தப் பணி மொத்தமாக பாதிப்பை சந்திக்கும். ஓட்டுச்சாவடி அலுவலர்களுடன், கட்சிகளின் பூத் ஏஜன்டுகள் இணைந்து செயல்பட, தேவையான அனைத்தையும் செய்வோம் என தேர்தல் கமிஷன் கூறியது; ஆனால், செய்யவில்லை. உங்களின் ஓட்டு நீக்கப்படுமா என்று கேட்டால், இல்லை என்று சொல்லிவிட முடியாது. அந்த நிலை ஏற்படாமல் இருக்க, விண்ணப்ப படிவத்தை வாங்கி, சரியாக பூர்த்தி செய்து திரும்ப ஒப்படைக்க வேண்டும். அதற்கான ஒப்புகை சீட்டை மறக்காமல் வாங்க வேண்டும். இது தான் வாக்காளர்களின் ஓட்டுரிமையை பாதுகாக்கும். பாதிக்கப்படும் அனைத்து பொதுமக்களும், நாங்கள் அறிவித்திருக்கும் 08065420020 என்ற உதவி எண்ணை தொடர்பு கொண்டு, தங்களின் சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளலாம். இவ்வாறு முதல்வர் பேசி உள்ளார். 'மீண்டும் தி.மு.க.,வின் ஆட்சி அமையாமல் தடுக்க பா.ஜ., திட்டம்' தி.மு.க., மாவட்டச் செயலர்கள் கூட்டம், 'வீடியோ கான்பரன்ஸ்' வழியே நேற்று நடந்தது. இக்கூட்டத்தில், முதல்வர் ஸ்டாலின் பேசியது பற்றி கட்சி நிர்வாகிகள் கூறியதாவது: நான் விசாரித்த வரை, வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் குறித்து, பொதுமக்களிடம் போதுமான விழிப்புணர்வு இல்லை. பல இடங்களில் ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கே புரியவில்லை என்று கூறுகின்றனர். தகுதியான வாக்காளர் ஒருவரின் பெயர் கூட, வரவிருக்கும் வாக்காளர் பட்டியலில் விடுபட்டு போய்விடக்கூடாது. அதேபோல, எந்த ஒரு தகுதி இல்லாத வாக்காளரையும் பட்டியலில் இணைத்து விடக்கூடாது. மீண்டும் தி.மு.க., ஆட்சி அமைந்து விடக்கூடாது என்பதற்காக, பல்வேறு திட்டமிடல்களை பா.ஜ., செய்து வருகிறது. குறிப்பாக, வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, தேர்தல் கமிஷன் போன்றவற்றை, நமக்கு எதிராக பயன்படுத்த தயாராகி கொண்டிருக்கின்றனர். யார் வந்தாலும் பார்த்துக் கொள்ளலாம்; களம் நம்முடையது தான். இவ்வாறு முதல்வர் பேசியதாக கட்சி நிர்வாகிகள் கூறினர். தி.மு.க., பொதுச்செயலர் துரைமுருகன் பேசுகையில், 'வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தை பொறுத்தவரை, தேர்தல் கமிஷனை விட, தி.மு.க., தான் பயிற்சி, களப்பணி, ஆய்வுக்கூட்டம் என அதிகப் பணிகளை செய்து வருகிறது' என்று தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 60 )

ஆரூர் ரங்
நவ 10, 2025 21:54

விண்ணப்பம் பெரிதாக உள்ளது?. புரியும் வகையில் துண்டு சீட்டு அளவில் கொடுத்தாலும் குறை கூறுவார்.


Suppan
நவ 10, 2025 19:53

ஸ்ரீரங்கம் தொகுதியில் வாக்காளர் படிவங்களை திமுகவைச்சேர்ந்த பெண் ஒருவர் கையாள்கிறார் என்பதை கண்டுபிடித்த பாஜகவினர். கேட்டால் என் மாமா சற்று நேரம் "பார்த்துக்கொள்ளச்சொன்னார்" என்கிறார் . .


Suppan
நவ 10, 2025 19:50

வாக்குத்திருட்டு என்று கூவும் ராகுலும் ஸ்டாலினும் இதற்கு என்ன பதில் சொல்லப்போகிறார்கள் ? ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதி மணிகண்டம் ஒன்றியத்தில் திமுகவினர் அராஜகம்,, பூத் கள ஆய்வில் அரசு அதிகாரிகள் மற்றும் BLo செய்ய வேண்டிய வாக்காளர் சிறப்பு தீவிர சீர்திருத்த பணியை திமுகவின் ஐடி வீங் சேர்ந்த நபர்கள் அவர்களுக்கு சாதகமாக முறையில் பயன்படுத்திக் கொள்கின்றனர்,, திமுக அரசு, அரசு எந்திரத்தை தவறான முறையில் பயன்படுத்தியது அம்பலமாகியுள்ளது,, இதற்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் திமுகவை கண்டித்து அறப்போராட்டத்தை பாஜக முன்னெடுக்கும், இந்த முறைகேட்டை அம்பலப்படுத்திய வீடியோ ஒன்று உலா வருகிறது


vijayasekar perumal Naidu
நவ 10, 2025 19:11

இங்கே கருத்து சொல்லுறவங்கள் எல்லோரும் வோட்டை போட்டாலே dmk வீட்டுக்கு போயிருவானுக . ஆனா போக மாட்டானுக .


Saai Sundharamurthy AVK
நவ 10, 2025 18:42

அதிமுக ஆட்சியின் போது ஆர்.எஸ்.பாரதி பேட்டி கொடுத்த வீடியோ ஒன்று சமூக வளைத் தளங்களில் உலா வருகிறது. அதில் தேர்தல் கமிஷன் வாக்காளர் பட்டியலை சீர்திருத்தி போலி வாக்காளர்களை நீக்க வேண்டும் என்று முழங்குகிறார். நிலைமை இப்படியிருக்க சொந்த மாநிலத்தில் அன்றாடம் நடக்கும் பெண்களுக்கு எதிரான சம்பவங்கள், அராஜகங்கள், கொள்ளை, கொலை சம்பவங்கள் போன்றவைகளை பற்றி எதுவும் வாய் திறப்பதில்லை. எப்போது பார்த்தாலும் இந்த மாதிரி திசை திருப்பும் பேச்சுக்களைத் தான் தினமும் மறுபடியும் மறுபடியும் பேசுகிறார்.


Gopalakrishnan Thiagarajan
நவ 10, 2025 17:51

sir விண்ணப்பபடிவம் miga சுலபமாக உள்ளது. வாக்காளர் அட்டை மற்றும் ஆதார் அட்டையை வைத்துக்கொண்டால் மிக சுலபமாக பூர்த்தி செய்து கொள்ளலாம். கூடவே ஆங்கிலத்திலும் இருந்தால் இன்னும் சுலபமாக இருக்கும்,.


மனிதன்
நவ 10, 2025 16:03

புதிய வாக்காளர் திருத்தம் தேவைதான் யாரும் மறுக்கவில்லை, ஆனால் அதை ஒரு வருடத்திற்கு முன்பே துவங்கி வரும் இந்த ஜனவரிக்குள் முடித்திருக்கவேண்டும், அதை விட்டுவிட்டு அவசர அவசரமாக தேர்தலுக்கு நெருக்கமாக ஒரு மாதத்திற்குள் முடிக்கவேண்டும் என சொல்வதுதான் சந்தேகமாக இருக்கிறது. ஒரு மாதத்திற்குள் ஆறரை கோடி மக்களுக்கு இந்த திட்டத்தை கொண்டுசேர்க்க முடியுமா? வெளியூர் சென்றவர்கள், வேலைக்கு சென்றவர்கள், வாடகை வீடு மாறியவர்கள் இப்படிபட்டவர்களின் வீடுகளுக்கு அதிகாரிகளால் இரண்டு மூன்றுமுறை செல்ல முடியுமா?? அப்படி செல்லவில்லையென்றால் அவர்களின் ஓட்டுரிமை காக்கப்படுமா?? மெத்த படித்தவர்களே குழப்பமடையும் இந்த படிவத்தை படிக்காத பாமர மக்கள் எப்படி நிரப்புவார்கள், அப்படியே வேறு நபரிடம் கொடுத்து நிரப்பினாலும் அதற்கான கால அவகாசம் இருக்கிறதா?? இப்படி நிறைய கேள்விகள்.... இதுதேவைதான், ஆனால் இப்படி அவசர அவசரமாக செய்ய சொல்வதுதான் சந்தேகத்திற்கு வழிவகுக்கிறது... சிந்திப்பவர்களுக்கு புரியும்... முட்டு கொடுப்பவர்களுக்கு என்ன சொன்னாலும் புரியப்போவதில்லை அல்லது புரிந்தாலும் முட்டு கொடுப்பதை நிறுத்தப்போவதில்லை....


kjpkh
நவ 10, 2025 17:35

அப்போ வாக்காளர் சீர்திருத்தம் முடிந்த பிறகு தேர்தலை வைத்துக் கொள்ளலாமா. அதுவரை கவர்னர் ஆட்சி நடக்கட்டும். சரிதானே.


vivek
நவ 10, 2025 18:26

சில ஒட்டகம் மூளைக்கு இந்த நல்ல திட்டம் எட்டாது..என்ன செய்ய மனிதா


theruvasagan
நவ 10, 2025 20:37

சரி.அவசரப்படவேண்டாம். நிதானமாக நடக்கட்டும். சட்டசபை ஆயுள் காலாலதி ஆனதும் கவர்னர் ஆட்சியை கொண்டுவந்து தேர்தலுக்கு தயாராகும் வரை நீட்டிக்கலாம்.


மனிதன்
நவ 10, 2025 21:46

ஒருத்தர் வாக்காளர் திருத்தம் முடிஞ்சு தேர்தலை வச்சுக்கலாமாங்குறார், இன்னொருத்தர் ஒட்டகங்குறான்வேறொருத்தர் கவர்னர் ஆட்சிங்குறார்... மொதல்ல படிங்கடா அப்புறம் கருத்து சொல்லுங்க... வந்துட்டானுங்க முட்டு கொடுக்க....


angbu ganesh
நவ 10, 2025 13:56

உப்பை தென்னவன் தண்ணி குடிச்சே ஆகணும்,


Nandakumar Naidu.
நவ 10, 2025 13:05

போலி தேச விரோத வாக்குகள் போய் விடுகிறதே என்று கதறுங்க.


Anand
நவ 10, 2025 13:01

முதல்லே, படுகேவலமாக பல்லிளித்துக்கொண்டிருக்கும் தமிழ்நாட்டு சட்டம் ஒழுங்கை பாரும். எப்பப்பாத்தாலும் மத்திய அரசு கொண்டுவரும் எந்த ஒரு நல்ல திட்டத்தையும் குத்தம் குறை நொட்டை சொல்லிக்கொண்டு. இப்படி கீழ்த்தரமாக விமர்சிக்க உங்களுக்கு கொஞ்சம் கூட வெட்கமாக இல்லையா?


புதிய வீடியோ