ஜெர்மனியில் முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு முதலீட்டாளர்கள் மாநாட்டில் இன்று பங்கேற்கிறார்
சென்னை: ஜெர்மனி சென்ற முதல்வர் ஸ்டாலினுக்கு, அங்கு வாழும் தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இன்று, உயர்நிலை முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் பங்கேற்க உள்ளார். தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, முதல்வர் ஸ்டாலின் எட்டு நாள் பயணமாக, ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து சென்றுள்ளார். நேற்று முன்தினம் சென்னையில் இருந்து விமானத்தில் புறப்பட்ட அவர், ஜெர்மனியின் டசெல்டோர்ப் விமான நிலையம் சென்றடைந்தார். அங்கு வடரைன் வெஸ்ட்பாலியா மாகாணத்தின் முதல்வர் ஹென்ட்ரிக் வூஸ்ட் சார்பில், அவரது அரசின் துாதரக விவகாரங்கள் மற்றும் அரசுமுறை வரவேற்பு பிரிவைச் சேர்ந்த அன்யா டி வூஸ்ட், பெர்லினில் உள்ள இந்திய துாதரகத்தின் பொறுப்பாளர் அபிஷேக் துபே, பிராங்க்பர்ட்டில் உள்ள இந்திய துணை துாதரகத்தின் பொறுப்பு துணைத்துாதர் விபாகாந்த் ஷர்மா ஆகியோர் முதல்வரை வரவேற்றனர். மேலும், நுாற்றுக்கணக்கான தமிழ் மக்கள், அவர்களின் குழந்தைகள், சமூகத் தலைவர்கள், கைகளில் மலர்கள் மற்றும் 'அப்பாவை வரவேற்கிறோம்' என்ற பதாகைகளை ஏந்தி, முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். நேற்று அயலக தமிழர்கள் நிகழ்ச்சியில் முதல்வர் பங் கேற்றார். இன்று, டசெல்டோர்ப் நகரில் நடக்க உள்ள உயர்நிலை முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு முதல்வர் ஸ்டாலின் தலைமை வகிக்க உள்ளார். மாநாட்டில், உலகளாவிய முதலீட்டாளர்கள் மற்றும் தொழில் துறை தலைவர்களுடன் கலந்துரையாடுகிறார். இதில், முதலீட்டு அறிவிப்புகள் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்புள்ளது. தமிழகத்தில் முதலீடு செய்யவும், தங்கள் தொழில் திட்டங்களை விரிவுபடுத்தவும் விரும்பும் முதலீட்டாளர்களை, முதல்வர் தனியே சந்தித்து பேசவும் உள்ளார். தமிழகத்திற்கும், ஜெர்மனியின் மிகவும் தொழில்மயமான மாகாணமான வடரைன் வெஸ்ட்பாலியாவுக்கும் இடையே, இரு தரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதன் ஒரு பகுதியாக, அம்மாகாண முதல்வர் ஹென்ட்ரிக் வூஸ்ட்டை, ஸ்டாலின் சந்திக்க உள்ளார். ஜெர்மனி பயணம் முடிந்த பின், இங்கிலாந்து செல்ல உள்ளார். ஜெர்மனி சென்றதும், முதல்வர் தன் சமூக வலைதள பக்கத்தில், 'வணக்கம் ஜெர்மனி. இங்கே உள்ள என் தமிழ் குடும்பத்தினரின் பாசத்தால் தழுவப்பட்டு, தமிழகத்தின் வலிமையை வெளிப்படுத்தவும், முதலீடுகளை ஈர்க்கவும், ஒளிமயமான எதிர்காலத்திற்கான கூட்டாண்மைகளை உருவாக்கவும், நான் பெருமையுடன் முன் செல்கிறேன்' என, பதிவிட்டுள்ளார். ஜெர்மனியின் டசெல்டோர்ப் விமான நிலையத்தில், முதல்வர் ஸ்டாலினை வரவேற்ற தமிழர்களின் குழந்தைகள்.