உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / காங்., - எம்.பி.,க்களை இன்று முதல்வர் ஸ்டாலின் சந்திக்கிறார்

காங்., - எம்.பி.,க்களை இன்று முதல்வர் ஸ்டாலின் சந்திக்கிறார்

சென்னை: தமிழக காங்கிரஸ் எம்.பி.,க்களுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். சமீபத்தில் தி.மு.க., - எம்.பி.,க்களுடன் முதல்வர் ஆலோசனை நடத்தினார். அக்கட்சியின் 33 எம்.பி.,க்களுக்கும், சட்டசபை தேர்தல் பணிகள் ஒதுக்கப்பட்டன. அதேபோல், கூட்டணி கட்சிகளின் எம்.பி.,க்களையும் அழைத்து பேசி, தேர்தல் பணிகளை ஒதுக்க ஸ்டாலின் விரும்பினார். அதன் அடிப்படையில், இன்று காலை 11:00 மணிக்கு, சென்னை அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேச, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த லோக்சபா எம்.பி.,க்கள் ஒன்பது பேருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அப்போது, தி.மு.க., - காங்., கூட்டணியில் நிலவும் பிரச்னைகள் குறித்து விரிவாக கேட்டறிய முதல்வர் ஸ்டாலின் முடிவெடுத்துள்ளார். காங்., - எம்.பி.,க்கள் சொல்லும் தகவலை வைத்து, பிரச்னைகளை சரி செய்யவும் தி.மு.க., தரப்பில் திட்டமிட்டுள்ளனர். தி.மு.க., - எம்.பி.,க்கள் வரும் நான்கு மாதங்களுக்கு தொகுதிக்குள் இருந்து மக்களை நேரடியாக சந்தித்து, அவர்களுடைய குறைகளை தீர்க்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் ஏற்கனவே கேட்டுக் கொண்டார். அதன் அடிப்படையில் தி.மு.க., - எம்.பி.,க்கள் தங்கள் தொகுதிகளுக்கு சென்று, மக்கள் குறைகளை கேட்டு வருகின்றனர். அதே போலவே, கூட்டணி கட்சி எம்.பி.,க்களும் தங்கள் தொகுதியில் மக்கள் குறைகளை தீர்ப்பதன் வாயிலாக, மக்கள் மத்தியில் தி.மு.க., கூட்டணி மீதான ஈர்ப்பு ஏற்படும் என்பதோடு, வரும் சட்டசபை தேர்தலில், கூட்டணிக்கு பலத்தை ஏற்படுத்தும் என்றும் முதல்வர் ஸ்டாலின் நம்புகிறார். அதற்காகவே, காங்.,கைச் சேர்ந்த ஒன்பது எம்.பி.,க்களை அழைத்து பேசும் ஸ்டாலின், அடுத்தடுத்த கட்டங்களில் வி.சி., - ம.தி.மு.க., - கொ.ம.தே.க., - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கூட்டணி கட்சி எம்.பி.,க்களையும் சந்திக்க திட்டமிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை