வால்பாறை : கோவை மாவட்டம், வால்பாறையில் ஒரு வாரமாக தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்கிறது. இதனால், சோலையாறு அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான, மேல்நீராறு, கீழ்நீராறு, கூழாங்கல் ஆறு, அக்காமலையில் இருந்து நீர்வரத்து வெகுவாக அதிகரித்துள்ளது.காற்றுடன் கனமழை பெய்வதால், பல்வேறு இடங்களில் மரம் விழுந்தும், மண் சரிந்தும் பாதிப்பு ஏற்பட்டது. கனமழையினால், வால்பாறையில் உள்ள ஆறு மற்றும் நீர்வீழ்ச்சிகளில் சுற்றுலா பயணியர் குளிக்க தடை விதிக்கபட்டுள்ளது.இடைவிடாது பெய்யும் கனமழையால், சோலையாறு அணையின் நீர்மட்டம் நேற்று காலை, 161.04 அடியாக உயர்ந்து, முழுக்கொள்ளளவும் நிரம்பியது. அணைக்கு வினாடிக்கு, 7,594 கனஅடி தண்ணீர் வரத்தாக இருந்தது. அணையிலிருந்து வினாடிக்கு, 1,087 கனஅடி தண்ணீர் வீதம் பரம்பிக்குளம் அணைக்கு திறந்து விடப்பட்டது.பரம்பிக்குளம் -- ஆழியாறு பாசனத்திட்டத்தின் முக்கிய அணைகளில் ஒன்றான சோலையாறு அணை நிரம்பியதால், பாசன விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.நேற்று காலை, 8:00 மணி வரை பதிவான மழை அளவு (மி.மீ.,):சோலையாறு - 55, பரம்பிக்குளம் - 18, வால்பாறை - 74, மேல்நீராறு - 114, கீழ்நீராறு - 65, காடம்பாறை - 31, சர்க்கார்பதி - 10, வேட்டைக்காரன்புதுார் - 9, மணக்கடவு - 13, துணக்கடவு - 10, பெருவாரிப்பள்ளம் - 17, பொள்ளாச்சி - 10, நவமலை - 2 என்ற அளவில் மழை பதிவாகியுள்ளது.