பாரம்பரியமாக தி.மு.க., பக்கம் உள்ள சிறுபான்மையினர் ஓட்டுகளை, த.வெ.க.,வுக்கு செல்லவிடாமல் தடுக்கும் நோக்கில், தி.மு.க., தரப்பில், 'அற்புத பெருவிழா' என்ற பெயரில், 8 மண்டலங்களில், கிறிஸ்துமஸ் விழா நடத்தப்பட உள்ளது. தமிழகத்தில் உள்ள கிறிஸ்துவர்கள், முஸ்லிம்களில் பெரும்பான்மையோர், தி.மு.க., காங்கிரஸ் கூட்டணிக்கு ஓட்டு அளிப்பது வழக்கம். பல்வேறு யுக்தி கடந்த 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணி, 159 தொகுதிகளில் வெற்றி பெற்றதற்கு, சிறுபான்மையினர் அளித்த ஆதரவே முக்கிய காரணம். நடிகர் விஜய் கட்சித் துவங்கி பின், அந்த ஓட்டுகள் த.வெ.க.,வுக்கு செல்லக் கூடும் என கணக்கிடப்படுகிறது. அதனால், வழக்கம்போல, கிறிஸ்தவ ஓட்டுகளை தங்கள் பக்கமே இறுத்திக் கொள்ள, தி.மு.க., பல்வேறு யுக்திகளை கையாளத் துவங்கி உள்ளது. இதற்காக, தி.மு.க.,வில் இருக்கும் 8 மண்டலங்களில், கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி, 'அற்புத பெருவிழா' நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது: நாகப்பட்டினம் மாவட்டத்தில், விஜய் பிரசாரம் செய்தபோது, மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. அப்போது, த.வெ.க., பெண் தொண்டர்கள், இயேசுவும், விஜயும் ஒன்றாக இருப்பது போன்ற பதாகைகளை ஏந்தி வந்தனர். உளவுத்துறை அறிக்கை விஜய்க்கு ஆதரவாக, வரும் தேர்தலில் கிறிஸ்தவர்கள் திரும்பக்கூடும் என, உளவுத் துறை சமீபத்தில், அரசுக்கு அறிக்கை அளித்துள்ளது. அதை தடுக்கவே, தி.மு.க., தரப்பில் யூகங்கள் வகுக்கப்பட்டுள்ளன. கிறிஸ்தவ மக்களிடையே, பிரபலமாக உள்ள மத போதகர்கள் வாயிலாக, தங்களுடைய யுக்திகளை செயல்படுத்தவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதன் துவக்கமாக, கோவை மண்டலத்தில் உள்ள ஊட்டியில் முதல் நிகழ்ச்சி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆதரவோடு அற்புத பெருவிழா நடத்தப்பட்டு உள்ளது. அந்நிகழ்ச்சியில் கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து, 90 ஆயிரம் கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். சிறப்பு பிரார்த்தனையில் சி.எஸ்.ஐ., போதகர்கள் உள்ளிட்ட கிறிஸ்துவ மதத்தின் முக்கிய பிரமுகர்களும் பங்கேற்றனர். தி.மு.க., உற்சாகம் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, ஊட்டி நகர தி.மு.க., செயலரும், மாவட்ட திட்டக் குழு உறுப்பினருமான ஜார்ஜ் செய்திருந்தார். அற்புத பெருவிழா என்ற பெயரில் நடந்த இந்நிகழ்ச்சிக்கு, கிறிஸ்துவ மக்களிடம் கிடைத்திருக்கும் வரவேற்பால், தி.மு.க., உற்சாகமடைந்துள்ளது. இதையடுத்து, கிறிஸ்துமஸ் பண்டிகை வரை, இதுபோன்ற அற்புத பெருவிழாக்களை, வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு என தி.மு.க.,வில் பிரிக்கப்பட்டுள்ள, 8 மண்டலங்களிலும் படு விமரிசையாக நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின. - நமது நிருபர் -