சினிமா இயக்குநர் வி.சேகர் மறைவு
சென்னை: திரைப்பட இயக்குநர் வி.சேகர் நேற்று காலமானார். திரைப்பட இயக்குநர் வி.சேகர், 72 . நெஞ்சு வலி காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில், 10 நாட்களுக்கு முன் அனுமதிக்கப்பட்டார். அங்கு, நேற்று மாலை உயிரிழந்தார். தன், 19 வயதில், ஏ.வி.எம்., ஸ்டூடியோவில் உள்ள 'லேப்'பில் உதவியாளராக பணியை துவங்கிய வி.சேகர், மாநகராட்சியில் பணியாற்றியபடி, மாலை நேர கல்லுாரியில் எம்.ஏ., பட்டப் படிப்பை முடித்தார். இதையடுத்து, இயக்குநர் கே.பாக்யராஜிடம் உதவியாளராக இரண்டு ஆண்டுகள் பணியாற்றினார். நீங்களும் ஹீரோ தான், பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும், வரவு எட்டணா செலவு பத்தணா, விரலுக்கு ஏத்த வீக்கம் உள்ளிட்ட நகைச்சுவை கலந்த குடும்ப கதையம்சம் கொண்ட படங்களை இயக்கி பிரபலமடைந்தார். இந்த நிலையில், சிலை கடத்தல் உட்பட சில பிரச்னைகளில் சிக்கி, சினிமாவில் இருந்து ஒதுங்கினார். வி.சேகரின் மறைவிற்கு, திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.