வாசகர்கள் கருத்துகள் ( 1 )
வாழ்த்துக்கள்
சென்னை:சிவில் சர்வீசஸ் தேர்வில், சென்னையை சேர்ந்த சிவச்சந்திரன், தேசிய அளவில், 23வது இடத்தையும், மாநில அளவில் முதலிடத்தையும் பிடித்துள்ளார். ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., - ஐ.எப்.எஸ்., மற்றும் மத்திய அரசு பணிகளுக்கான, 'குரூப் - ஏ' மற்றும், 'பி' பணிகளுக்கான, யு.பி.எஸ்.சி., எனப்படும், மத்திய அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வுகள் ஆண்டுதோறும் மூன்று கட்டங்களாக நடத்தப்படுகின்றன. கடந்த ஆண்டுக்கான முதல்நிலை தேர்வு, 2024 ஜூன், 16ல் நடந்தது. 9 லட்சத்து, 92 ஆயிரத்து, 599 தேர்வர்கள் விண்ணப்பித்தனர். அவர்களில், 5 லட்சத்து, 83 ஆயிரத்து, 213 பேர் தேர்வு எழுதினர். அவர்களில், 14,627 தேர்வர்கள், 2024 செப்டம்பரில் நடந்த பிரதான தேர்வுக்கு தகுதி பெற்றனர். பிரதான தேர்வில் வென்ற, 2,845 பேருக்கு, ஜன., 7 முதல் ஏப்ரல், 17 வரையில் நேர்முகத் தேர்வுகள் நடத்தப்பட்டன. ஒட்டுமொத்த தேர்வு நடைமுறைகள் முடிந்து இறுதி முடிவுகள் நேற்று வெளியாகின. இதில், சக்தி துபே என்ற பெண் முதலிடம் பிடித்துள்ளார். இவர், உ.பி.,யின் அலகாபாத் பல்கலையில் உயிர் வேதியியலில் இளங்கலை அறிவியல் பட்டம் பெற்றுள்ளார்.இரண்டாம் இடம் பிடித்துள்ள ஹர்ஷிதா கோயல், குஜராத்தின் பரோடாவில் உள்ள எம்எஸ் பல்கலையில் வணிகவியல் இளங்கலை பட்டம் பெற்றுள்ளார். மூன்றாம் இடம் பிடித்துள்ள டாங்ரே அர்சித் பராக், தமிழகத்தின் வேலுாரில் உள்ள வி.ஐ.டி., பல்கலையில், மின் மற்றும் மின்னணு பொறியியலில், பி.டெக்., பட்டம் பெற்றுள்ளார்.மூன்று பெண்கள், இரு ஆண்கள் முதல் ஐந்து இடங்களில் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்த பி.சிவச்சந்திரன், தேசிய அளவில், 23வது இடத்திலும், தமிழக அளவில் முதலிடத்திலும் தேர்ச்சி பெற்றுள்ளார். இவர் தமிழக அரசு நடத்தும், 'நான் முதல்வன்' திட்டத்தில் பயிற்சி பெற்றவர். தமிழகத்தைச் சேர்ந்த மோனிகா என்ற பெண் தேசிய அளவில், 39வது இடத்தைப் பெற்றுள்ளார். 'சிப்காட்' எனப்படும் தொழில் முன்னேற்ற நிறுவனத்தில், ஒப்பந்த அடிப்படையில் உதவி பொது மேலாளராக உள்ள பவித்ரா, தேசிய அளவில், 42வது இடத்தை பெற்றுள்ளார். ராமநாதபுரத்தைச் சேர்ந்த மாணவர் ஸ்ரீரஷீத், 22, அகில இந்திய அளவில், 52வது இடமும், தமிழக அளவில், 5ம் இடமும் பெற்றுள்ளார். அரவிந்த் ராதாகிருஷ்ணன் 80வது இடமும்
'நான் மட்டும் முதல்வன்' அல்ல; தமிழகத்தில் உள்ள ஒவ்வொருவரும் முதல்வனாக, என் பிறந்த நாளில் தொடங்கி வைத்த, 'நான் முதல்வன்' திட்டத்தில் பயிற்சி பெற்ற மாணவர், யு.பி.எஸ்.சி., தேர்வில் தமிழக தரவரிசையில் முதல்வனாகி இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. பல்லாயிரக்கணக்கான மாணவர்களின் திறன்களை மேம்படுத்தும் இந்தத் திட்டம், வருங்காலங்களில் லட்சக்கணக்கானோரின் வாழ்வில் ஒளியேற்றிடும் என்ற நம்பிக்கை என்னை மகிழ்ச்சியாக்கியுள்ளது.- முதல்வர் ஸ்டாலின்.
நான் முதலில் தன்னிச்சையாகப் படித்து, யு.பி.எஸ்.சி., தேர்வுக்கு தயாரானேன். பின், வழிகாட்டி யாரும் இல்லாததால், வெற்றி பெறுவதில் தாமதமாவதை அறிந்து, முதன்மை தேர்வுக்காக, 'நான் முதல்வன்' திட்டத்தில் சேர்ந்தேன். அதில், சிறப்பான பயிற்சியும், விடை எழுதுவது, மதிப்பெண்களை உயர்த்துவது உள்ளிட்ட ஆலோசனைகளை வழங்கினர். அத்துடன், நம் கடினமான உழைப்பு முக்கியமானது. அந்த வகையில், நான் தினமும் எட்டு மணி நேரம் படித்தேன். - சிவச்சந்திரன்.
சிவில் சர்வீசஸ் தேர்வை தமிழில் எழுதி 807வது இடம் பிடித்த, சங்கர் பாண்டியராஜ் கூறியதாவது: என் பெற்றோர், மதுரையில் தையல் கலைஞர்களாக இருந்ததால், எனக்கு முழுமையாக படிக்க பொருளாதரா ரீதியில் தடங்கல் இருந்தது. சென்னைக்கு வந்து, ஆறு மாதங்கள் வேலை பார்த்து, அதில் கிடைக்கும் வருவாயில் மற்ற ஆறு மாதங்கள் பயிற்சி வகுப்புகளுக்குச் செல்வேன். தமிழில் தேர்வெழுதுவதால், சிந்தனையை செம்மையாக தேர்வில் எழுத முடிகிறது. அதேநேரம், பெரும்பாலான புத்தகங்கள் ஆங்கிலத்தில் உள்ளதாலும், கேள்விகள், ஆங்கிலத்திலும். ஹிந்தியிலும் உள்ளதாலும், ஆங்கிலத்தை முழுமையாக தெரிந்திருப்பது அவசியம். தமிழில் தேர்வெழுதும்போது, நடப்பு நிகழ்வுகளுக்கு நாளிதழ்களை தான் நம்பி இருக்க வேண்டியள்ளது. ஆனால், பல்வேறு துறை சார்ந்த சொற்களுக்கு, பல்வேறு கலைச்சொற்களை பயன்படுத்துவதால், தேர்வில் ஆங்கிலச் சொற்களையே தமிழில் எழுதினேன். 'நான் முதல்வன்' திட்டத்தில் கிடைத்த பயிற்சியுடன், மாதம் 7,500 உதவித்தொகையும் எனக்கு உதவியாக இருந்தது. அதனால், வேலைக்குச் செல்வதை நிறுத்திவிட்டு படித்தேன்.இவ்வாறு அவர் கூறினார்.
வாழ்த்துக்கள்