உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்கள் போராட்டம்

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்கள் போராட்டம்

சென்னை:ஊதிய உயர்வு, பணியிடத்தில் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்வது உள்ளிட்ட, 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்கள் சங்கம் சார்பில், சென்னையில் நேற்று காத்திருப்பு போராட்டம் நடந்தது. சென்னை எழும்பூரில் உள்ள, கோ - ஆப்டெக்ஸ் தலைமை அலுவலகத்தில் நடந்த போராட்டத்திற்கு, அச்சங்கத்தின் பொதுச்செயலர் விஸ்வநாதன் தலைமை வகித்தார். கோரிக்கைகளை வலியுறுத்தி, ஊழியர்கள் கோஷங்கள் எழுப்பினர். பின், விஸ்வநாதன் அளித்த பேட்டி:கோ - ஆப்டெக்ஸ் நிறுவனம், கடந்த மூன்று ஆண்டுகளில், 30 கோடி ரூபாய் லாபம் ஈட்டியுள்ளது. ஆனால், ஊழியர்களுக்கு இரண்டு ஆண்டுகளாக வழங்க வேண்டிய ஊதிய உயர்வு, வீட்டு வாடகைப்படி, நகர ஈட்டுப் படி உள்ளிட்டவை கிடப்பில் போடப்பட்டுள்ளன. அதேபோல, கடைநிலை ஊழியர்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை வழங்கி வந்த பதவி உயர்வு முறையை, தி.மு.க., அரசு 2023ல் ரத்து செய்தது. இதை மீண்டும் நடைமுறைப்படுத்தி, கடைநிலை ஊழியர்களின் பதவி உயர்வை உறுதி செய்ய வேண்டும். மொத்தமுள்ள, 150 கிளைகளில், பல இடங்களில் கழிப்பறை வசதி இன்றி ஊழியர்கள் அவதியடைந்து வருகின்றனர். கழிப்பறை இல்லாத இடங்களில் பணிபுரியும் நிரந்தர ஊழியர்களுக்கு மட்டும், மாதம், 300 ரூபாய் வழங்கப்படுகிறது. ஆனால், தற்காலிக பணியாளர்களுக்கு அதுவும் வழங்கப்படுவதில்லை. இதனால், பெண் ஊழியர்கள் மாதவிடாய் காலத்தில் கடும் சிரமத்தை எதிர்கொள்கின்றனர். பெண்கள் பாதுகாப்புக்கான விசாகா கமிட்டி அமைக்கப்பட வேண்டும். இது குறித்து, அதிகாரிகளிடம் பல முறை கோரிக்கை மனு கொடுத்தும், அலட்சியம் காட்டி வருகின்றனர்.ஊழியர்கள் நலனில் அக்கறை இன்றி, விற்பனை இலக்கை மட்டும் அடைந்து விட்டதாக, அமைச்சரும், அதிகாரிகளும் விளம்பரம் செய்வது கண்டனத்திற்குஉரியது. இதற்கு மேலும் அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனில், காத்திருப்புப் போராட்டம் தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை