கோவை:கோவையில், 16 வயது சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், மூவருக்கு சாகும் வரை ஆயுள், நால்வருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து, போக்சோ கோர்ட்டில் தீர்ப்பு அளிக்கப்பட்டது.கோவையை சேர்ந்த, 16 வயது சிறுமி, 2019, நவ., 26ல், இரவில் பூங்கா அருகில் காதலனுடன் பேசிக்கொண்டிருந்தார். அதே பகுதியை சேர்ந்த ஏழு பேர், இருவரும் தனிமையில் பேசிக்கொண்டிருந்ததை கவனித்தனர். சிறுமியையும், காதலனையும் மிரட்டினர். காதலனை தாக்கிய அவர்கள், சிறுமியை மட்டும் தனியாக, அங்குள்ள தோட்டத்துக்கு பைக்கில் கடத்திச் சென்றனர்.சிறுமி சத்தம் போடாமல் இருக்க, வாயில் துணியால் அடைத்து, ஏழு பேரும் சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். அதை மொபைல் போனில் வீடியோ எடுத்தனர். சம்பவத்தை வெளியே சொன்னால், சமூக வலைதளங்களில் பரப்பி விடுவோம் என மிரட்டி, தப்பிச்சென்றனர்.நடந்த சம்பவம் குறித்து, சிறுமி வீட்டில் சொல்லாமல் இருந்துள்ளார். அவர் சோர்வாக இருப்பதை கண்டு, குடும்பத்தினர் கேட்ட போது, தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து கதறினார். அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய், ஆர்.எஸ்.புரம் மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். போலீசார் விசாரித்து, கூட்டு பலாத்காரத்தில் ஈடுபட்ட, சீரநாயக்கன்பாளையத்தை சேர்ந்த மணிகண்டன், 35, வடவள்ளி கார்த்திக், 30, வடவள்ளி ஆட்டோ மணிகண்டன், 35, சீரநாயக்கன் பாளையம் ராகுல், 26, பிரகாஷ், 27, வடவள்ளி நாராயணமூர்த்தி, 36, சீரநாயக்கன் பாளையம் கார்த்திகேயன், 35, ஆகியோரை கைது செய்தனர்.அவர்கள் மீது, 10 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. கோவை முதன்மை போக்சோ கோர்ட்டில் வழக்கு விசாரணை நடந்தது. விசாரித்த நீதிபதி பகவதியம்மாள், நேற்று தீர்ப்பளித்தார். மணிகண்டன், கார்த்திக், ஆட்டோ மணிகண்டன் ஆகியோருக்கு, சாகும் வரை ஆயுள் சிறையும், ராகுல், பிரகாஷ், நாராயணமூர்த்தி, கார்த்திகேயன் ஆகியோருக்கு ஆயுள் சிறையும் விதித்து தீர்ப்பளித்தார்.ஏழு பேருக்கும், மொத்தம், 3.95 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, அரசு தரப்பில், 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க, நீதிபதி உத்தரவிட்டார்.