மோந்தா ஆந்திராவுக்கு; மழை நமக்கு!
சென்னை : 'வங்கக்கடலில் உருவாகும் 'மோந்தா' புயல், தீவிர புயலாக வலுப்பெற்று, வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை மறுதினம் ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தில் பலத்த மழை இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால், மாநிலம் முழுதும் கனமழை பெய்து வருகிறது. நேற்று காலை 8:30 மணியுடன் நிறைவு பெற்ற 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் ஊத்து பகுதியில் 14 செ.மீ., கனமழை பெய்துள்ளது. வலுவடைந்தது அதேபோல, அங்குள்ள நாலுமுக்கு பகுதியில் 13 செ.மீ., மழையும், காக்காச்சி பகுதியில் 11 செ.மீ., மழையும் பதிவாகியுள்ளது. சென்னை மீனம்பாக்கம் மற்றும் பள்ளிக்கரணை பகுதிகளில் தலா, 3 செ.மீ., மழை பெய்துள்ளது. இந்நிலையில், தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், வரும் நாட்களில் வலுவடைந்து, தீவிர புயலாக கரையை கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதன் அறிக்கை: தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று காலை 5:30 மணிக்கு மேற்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது, நேற்று காலை 11:30 மணி நிலவரப்படி, மணிக்கு 7 கி.மீ., வேகத்தில் மேற்கு திசை நோக்கி நகர்ந்து வருகிறது. அந்தமான் தீவுகளுக்கு மேற்கு - தென்மேற்கில் 460 கி.மீ., தொலைவிலும், விசாகப்பட்டினத்தில் இருந்து தென்கிழக்கே 960 கி.மீ., தொலைவிலும், சென்னையில் இருந்து கிழக்கு - தென் கிழக்கே 950 கி.மீ., தொலைவிலும், காக்கி நாடாவில் இருந்து தென் கிழக்கே 970 கி.மீ., தொலைவிலும், இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது. இது, மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், நாளை காலை தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் புயலாகவும் உருவெடுக்கும். தொடர்ந்து வடக்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை மறுதினம் தீவிர புயலாக வலுவடையும். பின், ஆந்திர கடலோர பகுதிகளில் மசூலிப்பட்டினம் - கலிங்கப்பட்டினத்திற்கு இடையே, காக்கிநாடாவுக்கு அருகே தீவிர புயலாக, அன்று மாலை முதல் இரவுக்குள் கரையை கடக்கும். இந்த நேரத்தில் 90 - 100 கி.மீ., வேகத்திலும், சில நேரங்களில் 110 கி.மீ., வேகத்திலும் பலத்த காற்று வீசும். இதன் காரணமாக, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், ராணிப்பேட்டை மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் இன்று கனமழை பெய்யும். நாளை, ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும். இந்த மாவட்டங்களுக்கு 'ஆரஞ்ச் அலெர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. கனமழை அத்துடன், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலுார் மாவட்டங்களிலும், புதுச்சேரி பகுதிகளிலும் கனமழை பெய்யும். நாளை மறுதினம், ராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதேபோல, தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, வடமேற்கு திசையில் நகர்ந்து, அதே பகுதியில் நிலவுகிறது. இது, அடுத்த 24 மணி நேரத்தில், மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிக்கு நகரும். இதன் காரணமாக, கடலோர கர்நாடகா, கேரளா, மஹாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களில் இரு நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. இவ்வாறு வானிலை மைய அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சென்னைக்கு பெருமழையா? வங்கக்கடலில் உருவாகும் மோந்தா புயலால், சென்னையில் நாளை, நாளை மறுதினம் கனமழை பெய்யும். இருப்பினும், புயல் காக்கிநாடா அருகே கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளதால், புயல் சின்னம் கரையில் இருந்து 700 கி.மீ., நெருங்கும் போது தான், சென்னைக்கான மழையின் தீவிரத்தை துல்லியமாக கணிக்க முடியும். தற்போதைய சூழலில், வானிலை காரணிகள் சென்னைக்கு சாதகமாக உள்ளன. இதனால், காக்கிநாடா அருகே புயல் கரையை கடந்தாலும், சென்னையில் கனமழை பொழிய அதிகம் வாய்ப்பு உள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று சென்னைக்கு அருகே 700 கி.மீ., நெருங்கும் போது, இன்னும் உறுதியாக கணிக்க முடியும் . - ஹேமசந்திரன், தனியார் வானிலை ஆய்வாளர் மீனவர்கள் உஷார்! 'மோந்தா' புயல் காரணமாக, வங்கக்கடலில் சூறைக்காற்று வீசும். இதனால், மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு நாளை மறுதினம் வரையிலும், ஆந்திரா மற்றும் ஒடிஷா கடலோர பகுதிகளுக்கு 29ம் தேதி வரையிலும் மீனவர்கள் செல்ல வேண்டாம் என, வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.