பெண் போலீசுக்கு எதிரான ஆணையத்தின் உத்தரவு ரத்து
சென்னை:பெண் போலீசுக்கு எதிராக, மனித உரிமை ஆணையம் பிறப்பித்த உத்தரவை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.திருச்சி கன்டோன்மென்ட் மகளிர் போலீஸ் நிலையத்தில்,ஹேமலதா என்பவர் காவலராக பணியாற்றி வந்தார். திருச்சி பஸ் நிலையத்தில் பிரபு என்பவர் உட்கார்ந்து, அங்கிருந்த பெண்களை பார்த்து, பாட்டு பாடுவதும், தோற்றத்தை கேலி செய்வதுமாக இருந்தார். இதையடுத்து, அவரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று, வழக்குப் பதிவு செய்தனர். போலீஸ் நிலையத்திலேயே அவருக்கு ஜாமின் வழங்கப்பட்டது.பின், தொட்டியம் அரசு மருத்துவமனையில், இரண்டு நாட்கள் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றுள்ளார். தன்னை தாக்கியதாகவும், மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாகவும், ஹேமலதா உள்ளிட்ட எட்டு போலீசாருக்கு எதிராக, மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்தார். விசாரணைக்கு பின், பிரபுவுக்கு 30,000 ரூபாய் இழப்பீடு வழங்க, அரசுக்கு ஆணையம் உத்தரவிட்டது.இந்த உத்தரவை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில், ஹேமலதா மனு தாக்கல் செய்தார். மனுவை, நீதிபதிகள் எம்.சுந்தர், கே.ராஜசேகர் அடங்கிய அமர்வு விசாரித்தது. மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் பி.கோபாலகிருஷ்ணன் ஆஜரானார். நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:பெண் கான்ஸ்டபிள் தாக்கியதற்கான ஆதாரம் எதுவும் இல்லை. ஊகத்தின் அடிப்படையில், மனித உரிமை ஆணையம் முடிவுக்கு வந்துள்ளது. பிரபு அளித்த புகாரில், வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதை, நீதிமன்றம்தான் ஆராய வேண்டும். காயமடைந்ததற்கான ஆதாரமும் இல்லை. அதற்கான சான்றிதழையும் தாக்கல் செய்யவில்லை.போலீஸ் நிலையத்தில் ஜாமின் வழங்கிய பின், மறுநாள் இரவு தான் மருத்துவமனையில் சேர்ந்துள்ளார். ஆதாரத்தின் அடிப்படையில் மனித உரிமை ஆணையத்தின் உத்தரவு இல்லை. எனவே, ஆணையத்தின் உத்தரவு, ரத்து செய்யப்படுகிறது.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.