கம்யூ., தலைவர் நல்லகண்ணு தவறி விழுந்து தலையில் காயம்
சென்னை : இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு, 100, சென்னையில் வசித்து வருகிறார். அவர், வீட்டிற்குள் கீழே தவறி விழுந்ததில், தலையில் காயம் ஏற்பட்டு, சென்னை நந்தனத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை குறித்து, மருத்துவமனை இயக்குநர் தில்லை வள்ளல் வெளியிட்ட அறிக்கை: இ.கம்யூ., மூத்த தலைவர் நல்லகண்ணு, கடந்த 22ம் தேதி, வீட்டில் தவறி விழுந்தார். அதனால், தலையில் காயம் ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு 'ஸ்கேன்' எடுக்கப்பட்டது. தலையில் காயம் ஏற்பட்ட பகுதியில், தையல் போடப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. நரம்பியல், நுரையீரல், இதயம் சிகிச்சை நிபுணர்கள் மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவு நிபுணர் அடங்கிய மருத்துவர் குழு, சிகிச்சை அளிக்கிறது. தற்போது அவரது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஓரிரு நாளில், வீடு திரும்புவார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.