உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  ரூ.100 முத்திரைத்தாள் ரூ.120க்கு விற்பனை; முகவர்கள் அடாவடி செய்வதாக புகார்

 ரூ.100 முத்திரைத்தாள் ரூ.120க்கு விற்பனை; முகவர்கள் அடாவடி செய்வதாக புகார்

சென்னை: பத்திரங்கள் எழுதுவதற்கான, 100 ரூபாய் முத்திரைத்தாள் பயன்பாடு அதிகரித்துள்ளதால், அவற்றை கூடுதல் விலைக்கு, முகவர்கள் விற்பனை செய்வதாக புகார் எழுந்துள்ளது. தமிழகத்தில், வீடு, மனை விற்பனை ஒப்பந்தம் மட்டுமல்லாது, பல்வேறு ஆவணங்கள் எழுதுவதற்கும் முத்திரைத்தாள்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றில், வீட்டு வாடகை போன்ற சிறிய அளவிலான ஒப்பந்தங்களுக்கு, 20 ரூபாய் முத்திரைத்தாள் அதிகம் பயன்பாட்டில் இருந்தது. இந்நிலையில், குறைந்தபட்ச முத்திரைத்தாள் மதிப்புகளை, தமிழக அரசு, கடந்த ஆண்டு, 100 ரூபாயாக உயர்த்தியது. இதனால், 20, 50 ரூபாய் முத்திரைத்தாள் பயன்பாடு வெகுவாக குறைந்தது. அவற்றுக்கு பதிலாக, 100 ரூபாய் மதிப்பிலான, முத்திரைத்தாள்கள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. முத்திரைத்தாளில் குறிப்பிட்ட மதிப்புக்கு மட்டுமே, அவற்றை விற்க வேண்டும் என, பதிவுத்துறை அறிவித்துள்ளது. அதிகமான மக்கள், 100 ரூபாய் முத்திரைத்தாளை வாங்க ஆர்வம் காட்டுகின்றனர். இதனால், துவக்கத்தில் 10 ரூபாய் கூடுதலாக வைத்து, 100 ரூபாய் முத்திரைத்தாளை விற்ற முகவர்கள், தற்போது, 20 ரூபாய் கூடுதலாக வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது. இது குறித்து, சென்னை போரூரை சேர்ந்த, சமூக ஆர்வலர் செந்தில்குமார் கூறியதாவது: சென்னையில், போரூர் உட்பட பல்வேறு இடங்களில் முத்திரைத்தாள்களை முகவர்கள் அதிக விலைக்கு விற்கின்றனர். முத்திரைத்தாளின் மதிப்பில், குறிப்பிட்ட அளவு தொகை, அவர்களுக்கு கமிஷனாக வழங்கப்படுகிறது. எனினும், கூடுதல் விலைக்கு விற்கின்றனர். ஆரம்பத்தில், 10 ரூபாயில் துவங்கிய கூடுதல் வசூல், தற்போது, 20, 40 ரூபாய் என அதிகரித்துள்ளது. இது தொடர்பாக புகார் அளித்தாலும், பதிவுத்துறை அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

சூரியா
டிச 11, 2025 05:59

என்ன நாட்டு நடப்பு தெரியாமல் இருக்கிறீர்கள்! ₹ 100/ முத்திரைத்தாள், ₹40 அல்லவா மேல் வைத்து விற்கிறார்கள்! புதுச்சேரி, மற்றும் பல மாநிலங்களில் உள்ளதுபோல, தாங்களாகவே eStamp பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதியைத் தரவேண்டும். அல்லது, முத்திரைத்தாள்களைத் தபால் நிலையங்கள் மூலம் விற்க வேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை