பழனிசாமி சுற்றுப்பயணம் வெற்றி பெற வாழ்த்து
சென்னை விமான நிலையத்தில் வி.சி., தலைவர் திருமாவளவன் நேற்று அளித்த பேட்டி:அஜித்குமார் கொலை வழக்கில் தொடர்புடையவர்கள், சாட்சிகளாக இருப்பவர்கள் அஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது. அவர்களது குடும்பத்தினருக்கும் அச்சுறுத்தல் உள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய நபர்களுக்கு, தமிழக அரசு ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும். அஜித்குமார் மீது புகார் அளித்த நிகிதா, மருத்துவர் என குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், அவர் பிஎச்.டி., பட்டம் பெற்றவர் என்றும், அவர் குடும்பத்தினர் மீது ஏற்கனவே பண மோசடி வழக்கு உள்ளதும் தெரிகிறது. அது குறித்தும் விசாரணை நடத்த வேண்டும்.அவர் கோவிலுக்கு நகை கொண்டு வந்தாரா என்ற சந்தேகமும் இருக்கிறது. அவருக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவு இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், நீதிமன்றத்தில் அது மறுக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க.,வின் 'தமிழகம் காப்போம்' என்ற முன்னெடுப்பு வெற்றி பெற வாழ்த்துகிறேன். ஆனால், பா.ஜ., - ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார் அமைப்புகளுடன் இணைந்து, பழனிசாமி எப்படி தமிழகத்தைக் காப்பாற்றப் போகிறார் என்பது தான் சந்தேகமாக உள்ளது. போலீசாருக்கு பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் பயிற்சி தேவைப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.