காங்., தலைவர்கள் பேச்சு: வலுக்கும் கூட்டணி சர்ச்சை
'வரும் சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் நீடிக்க வேண்டுமானால் கூட்டணி ஆட்சி வேண்டும்; கூடுதல் தொகுதிகள் வேண்டும்' என்ற கோரிக்கை, காங்கிரசில் வலுத்து வருகிறது. தமிழக காங்., முன்னாள் தலைவர் அழகிரியும், பெரம்பலுார் மாவட்ட காங்., தலைவர் சுரேஷும் கொளுத்தி இருக்கும் வெடி, கூட்டணிக்கு வேட்டு வைக்கும் என தெரிகிறது. அழகிரி கூறியதாவது: கடந்த 60 ஆண்டு காலமாக, காங்கிரஸ் கட்சி ஏதாவது ஒரு அரசியல் கட்சியுடன் கூட்டு சேர்ந்து, சாறை அவர்கள் குடிப்பதற்கும், சக்கையை நாங்கள் பார்ப்பதுமாக ஒரு சூழ்நிலை நிலவுகிறது. அந்த நிலையை மாற்றி, வெற்றி பெறும் அரசில் எங்களுக்கும் பங்கு வேண்டும் என கேட்கும் நிலைக்கு வருவோம். கூடுதல் தொகுதி தாருங்கள் என கேட்பதில் தவறு ஒன்றும் இல்லை. பசிக்கிறது, இன்னும் கொஞ்சம் சோறு போடுங்கள் என, தாயிடம் குழந்தை கேட்பதைபோல் தான் இதுவும். இவ்வாறு அவர் கூறினார். சுரேஷ் கூறியதாவது: காங்கிரஸ் இல்லாமல், எந்த கட்சியும் ஆட்சிக்கு வர முடியாது. தமிழகம் முழுதும் காங்கிரசை நம்பி தான் மக்கள் ஓட்டு போடுகின்றனர். ஆட்சி அதிகாரத்தில் காங்கிரஸ் வந்தால் தான் காமராஜர் ஆட்சியை உருவாக்க முடியும். கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகினால், அனைத்து தொகுதிகளிலும் தி.மு.க., தோல்வியை தழுவும். இவ்வாறு அவர் கூறினார். - நமது நிருபர் -