மதுரை: 'திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள தீபத்துாணிலும் தீபம் ஏற்ற வேண்டும்' என, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை நிறைவேற்றாததால் தாக்கலான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், 'தலைமை செயலர், சட்டம் - ஒழுங்கு ஏ.டி.ஜி.பி., ஆகியோர் வரும், 17ம் தேதி மதியம், 3:00 மணிக்கு காணொளியில் ஆஜராக வேண்டும்' என, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்டம் எழுமலை ராம ரவிக்குமார் தாக்கல் செய்த மனுவை, விசாரித்த தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், 'திருப்பரங்குன்றம் மலையில் வழக்கமான இடங்களை தவிர, தீபத்துாணிலும் டிச., 3ல் கார்த்திகை தீபத்தை சுப்பிரமணியசுவாமி கோவில் நிர்வாகம் ஏற்ற வேண்டும். 'இந்த ஆண்டு முதல் தீபத்துாணிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்படுவதை உறுதி செய்வது போலீசாரின் கடமை' என, உத்தரவிட்டார். இந்த உத்தரவை நிறைவேற்றாததால், 'கலெக்டர் பிரவீன்குமார், போலீஸ் கமிஷனர் லோகநாதன், கோவில் செயல் அலுவலர் யக்ஞநாராயணன் மீது நீதிமன்ற அவமதிப்பின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்' என, ராம ரவிக்குமார் மனு தாக்கல் செய்தார். இதை அவசர வழக்காக டிசம்பர், 3ல் விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், 'உச்சிப் பிள்ளையார் கோவிலில் மாலை, 6:00 மணிக்கு தீபம் ஏற்றப்பட்டது. தீபத்துாணில் தீபம் ஏற்றவில்லை. பிற மனுதாரர்கள் உட்பட, 10 பேரை மனுதாரர் அழைத்துச் செல்லலாம். அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க சி.ஐ.எஸ்.எப்., வீரர்களை அனுப்ப உயர்நீதிமன்ற சி.ஐ.எஸ்.எப்., கமாண்டன்டிற்கு உத்தரவிடுகிறேன்' என்றார். இதை எதிர்த்து அரசு தரப்பில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு டிசம்பர், 4ல் தள்ளுபடி செய்தது. இதனால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை டிச., 4ல் விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், ''கார்த்திகை தீபத்தை தீபத்துாணில் ஏற்ற வேண்டும். போலீசார் பாதுகாப்பு அளிக்க வேண்டும். அதை நிறைவேற்றியது குறித்து அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்'' என்றார்.இந்நிலையில், இந்த அவமதிப்பு வழக்கை நேற்று மீண்டும் விசாரித்த நீதிபதி சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு: மனுதாரர் தரப்பை, தீபத்துாணில் தீபம் ஏற்ற இந்த நீதிமன்றம் மீண்டும் அனுமதித்தது. அந்த உத்தரவு நிறைவேற்றப்படவில்லை. போலீஸ் கமிஷனர் லோகநாதனுக்கு பதிலாக மதுரை தெற்கு போலீஸ் துணை கமிஷனர் இனிகோ திவ்யன் திருப்பரங்குன்றத்தில் இருந்துள்ளார். மனுதாரர் தரப்பை மலையேற அவர் அனுமதிக்கவில்லை. அவரும் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றவில்லை என்பதால், அவருக்கு எதிராக நடவடிக்கை கோரி கூடுதல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இனிகோ திவ்யன் ஆஜராக நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்படுகிறது.இரு நீதிபதிகள் அமர்வின் தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு, எப்போது விசாரணைக்கு பட்டியலிடப்படும் என்று கேள்வி எழுப்பினேன். அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விகாஸ் சிங், 'ஒரே பிரச்னையை வெவ்வேறு நீதிமன்றங்களில் எழுப்ப விரும்பவில்லை. உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை வாபஸ் பெறக்கூடும்' என்று தானாக முன்வந்து தெரிவித்தார். இப்பிரச்னையில் உச்ச நீதிமன்றம் தலையிடவில்லை என்றே நான் முடிவு செய்கிறேன். பிரதான ரிட் மேல்முறையீட்டு மனு மீது, உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு எந்த இடைக்கால உத்தரவும் பிறப்பிக்கவில்லை. எனவே, இந்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு செல்லுபடியாகும். தமிழக அரசின் தலைமை செயலர், சட்டம் - ஒழுங்கு ஏ.டி.ஜி.பி., வரும், 17ம் தேதி மதியம், 3:00 மணிக்கு காணொலி மூலம் இந்நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும். மத்திய உள்துறை செயலரை எதிர்மனுதாரராக சேர்க்க மனுதாரர் தரப்பு கோரியது. அதனடிப்படையில் சேர்க்கப்பட்டு மத்திய உள்துறை செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்படுகிறது. இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.