மும்பை: பா.ஜ.,வின் கடும் எதிர்ப்பையும் மீறி மஹாராஷ்டிரா முன்னாள் அமைச்சரும் அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்., கட்சியைச் சேர்ந்தவருமான நவாப் மாலிக், மன்குர்ட் சிவாஜி நகர் வேட்பாளராக போட்டியிட அனுமதி பெற்றது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.288 உறுப்பினர்கள் கொண்ட இம்மாநில சட்டசபைக்கு நவ. 20-ல் ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. இதில் காங்.,தேசியவாத காங்., உத்தவ் சிவசேனா ஆகிய அணிகள் மஹாராஷ்டிரா விகாஸ் அகாடி என்ற கூட்டணியையும், பா.ஜ., ஏக்நாத்ஷிண்டே தலைமையில் சிவசேனா, அஜித்பவாரின் தேசியவாத காங். ஆகிய கட்சிகள் மஹாயூதி என்ற அணியையும் ஏற்படுத்தியுள்ளன.இந்நிலையில் அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்., கட்சியைச் சேர்ந்த நவாப்மாலிக் என்பவர் இன்று மன்குர்ட் சிவாஜி நகர் தொகுதியில் சுயேட்சையாகவும் , அஜித்பவார் தேசியவாத காங்., கட்சி அதிகாரப்பூர்வ வேட்பாளராக வேட்புமனு செய்ய திட்டமிட்டதாக தகவல் வெளியானது. ஒருவர் இரண்டு வேட்புமனு தாக்கல் எப்படி செய்ய முடியும். என்ற நிலையில், கடைசியில் தேசியவாத காங்.,கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக ஏ.பி., படிவம் நவாப் மாலிக்கிற்கு வழங்கப்பட்டு, அதன்படி வேட்புமனு தாக்கல் செய்ததாகவும் கூறப்படுகிறது.தேசியவாத காங், கட்சி வட்டாரங்கள் கூறுகையில், நவாப் மாலிக் தற்போது அனுஷக்தி நகர் தொகுதி எம்.எல்.ஏ.வாக உள்ளார். இத்தொகுதியில் தனது மகள் சானா மாலிக்கை நிறுத்தியுள்ளார். இவர் நிழல் உலக தாதா தாவூத்இப்ராஹிமுடன் தொடர்பில் இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டில் கடந்த 2022ம் ஆண்டு கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளியே வந்துள்ளார். மன்குர்ட் சிவாஜி நகரில் போட்டியிட சீட் வழங்கினால், பா.ஜ., பிரசாரம் செய்யாது எனவும், தகவல் வெளியானது.இதையடுத்து சுயேட்சையாக போட்டியிட முயன்றார். பின்னர் பா.ஜ.,வின் எதிர்ப்பையும் மீறி அஜித்பவார் கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு அதற்கான படிவம் பெற்று கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்தார். இதனால் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.