மரவள்ளி கிழங்குக்கு கூட்டுறவு ஆலை; தமிழக பா.ஜ., வலியுறுத்தல்
சென்னை: தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் அறிக்கை: கூட்டுறவு ஆலை அமைத்து, உரிய விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என, மரவள்ளி கிழங்கு விவசாயிகள், தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அதை கண்டு கொள்ளாமல், தி.மு.க., அரசு அலட்சியம் செய்வது கண்டனத்திற்கு உரியது. தேர்தல் சமயத்தில், 'மரவள்ளி கிழங்குக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்' என, தி.மு.க., தேர்தல் வாக்குறுதி அளித்தது. அதை நிறைவேற்றவில்லை. விலை வீழ்ச்சியால், விவசாயிகளை அவதியுற விட்டதோடு, தற்போது, கூட்டுறவு ஆலை அமைக்காமல் அலைக்கழிப்பது தான், தி.மு.க., அரசின் உழவர் நலனா? விவசாயிகளுக்கு முறையான பாசன வசதி ஏற்படுத்தி தருவதில்லை. விளைவித்த பயிருக்கு முறையான விலை கிடைக்க வழிவகுப்பதில்லை. உழவர் நலன் தொடர்பான, தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவும் இல்லை. இந்த லட்சணத்தில், 'பச்சை துண்டு போடும் போலி விவசாயி நான் அல்ல' என்று, ஆவேசமாக முழங்குவதால், என்ன பயன் என்பதை, முதல்வர் ஸ்டாலின் உணர வேண்டும். விளம்பரங்களை விடுத்து, உடனே மரவள்ளி கிழங்குக்கு கூட்டுறவு ஆலை அமைத்து, குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.