உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பிரிஜ், வாஷிங் மிஷின் விற்க கூட்டுறவு நிறுவனங்கள் முடிவு

பிரிஜ், வாஷிங் மிஷின் விற்க கூட்டுறவு நிறுவனங்கள் முடிவு

சென்னை:கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும், கூட்டுறவு பண்டக சாலைகளும், கூட்டுறவு சங்கங்களும், ரேஷன் கடை, பல்பொருள் அங்காடி, மருந்தகம், காய்கறி கடை, பெட்ரோல் பங்க், காஸ் ஏஜென்சி ஆகியவற்றை நடத்துகின்றன. இதற்கு, மக்களிடம் வரவேற்பு உள்ளது. புதிதாக 'டிவி, பிரிஜ்' உள்ளிட்ட எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களை விற்க, கூட்டுறவு துறை முடிவு செய்துள்ளது. கூட்டுறவு கூடுதல் பதிவாளர் ஒருவர் கூறியதாவது:கூட்டுறவு நிறுவனங்களில் விற்கப்படும் பொருட்களை, மக்கள் நம்பிக்கையுடன் வாங்குகின்றனர். இதற்கு தரமாக இருப்பதும், விலை குறைவாக இருப்பதுமே காரணம். முன்னணி நிறுவனங்களின், 'டிவி, பிரிஜ், வாஷிங் மிஷின், மொபைல் போன்' உள்ளிட்ட எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களை வாங்கி, விற்கும் தொழிலில் பல நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.இந்த துறையின் சந்தை மதிப்பு தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. இதனால், நாட்டின் மிகப்பெரிய தொழில் நிறுவனங்களும், இந்த சந்தையில் களமிறங்கி உள்ளன. மொத்தமாக எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் வாங்கும் போது, குறைந்த விலையில் கிடைக்கும். அந்த விலையுடன், 5 சதவீதம் கூடுதல் விலை வைத்து விற்றாலே, மக்களுக்கு குறைந்த விலையில் சாதனங்கள் கிடைக்கும். எனவே, முன்னணி நிறுவனங்களின் எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களை வாங்கி, கூட்டுறவு நிறுவனங்கள் வாயிலாக விற்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, சாம்சங், எல்.ஜி., உள்ளிட்ட நிறுவனங்களுடன், எந்த விலைக்கு சாதனங்களை வாங்குவது என பேச்சு நடக்கிறது. விரைவில் இரண்டு - மூன்று நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு, எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களை வாங்கி, மக்களுக்கு அதிக தள்ளுபடியில் விற்க, நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ