கூட்டுறவு சங்க பணியாளர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு
சென்னை:அடுத்த மாதம், 14ம் தேதி முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக, தமிழக தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, அச்சங்கம் சார்பில், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளருக்கு அனுப்பியுள்ள கடிதம்:அரசால் அறிமுகம் செய்யப்பட்டுள்ள, 'புளூ டூத்' முறை, கைரேகை, கருவிழி பதிவுகள் காரணமாக, ரேஷன் பொருட்கள் வினியோகம் செய்வதில் காலதாமதம் ஏற்படுகிறது. இதனால், மக்களின் அதிருப்தியை ரேஷன் ஊழியர்கள் தினமும் சந்திக்க வேண்டியுள்ளது. இதுபோன்ற நடைமுறைகளை எதிர்த்தும், எட்டு அம்ச கோரிக்கைகளை பரிசீலித்தும், ஒரு வாரத்திற்குள் வினியோகம் சீராக நடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறினால் வரும், 27ம் தேதி அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள் முன் கோரிக்கைகளை வலிறுயுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தவும், ஜூலை 14ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.