உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பா.ஜ., கூட்டணி பேரத்திற்கு ஊழல்கள் தான் ஊன்றுகோல் * தி.மு.க., குற்றச்சாட்டு

பா.ஜ., கூட்டணி பேரத்திற்கு ஊழல்கள் தான் ஊன்றுகோல் * தி.மு.க., குற்றச்சாட்டு

சென்னை:'பா.ஜ., கூட்டணிக்கு ஊன்றுகோலாக ஊழல்கள் தான் இருக்கின்றன' என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு, தி.மு.க., அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி பதில் அளித்துள்ளார்.மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சமீபத்தில் அளித்த பேட்டியில், 'தி.மு.க., ஊழலால், தமிழக மக்கள் சலிப்படைந்துள்ளனர். அதனால், லோக்சபா தொகுதி மறுவரையறை விவகாரத்தை எழுப்பி, ஊழல்களை மூடி மறைக்கப் பார்க்கிறது' என்றார்.அதற்கு பதிலளிக்கும் வகையில், ஆர்.எஸ்.பாரதி அறிக்கை:மத்திய அரசின் திட்டங்களில் நடந்த ஊழல்களை, கடந்த 2023-ல் வெளியிட்ட சி.ஏ.ஜி., எனும் மத்திய கணக்கு தணிக்கை அறிக்கையில், 7 லட்சத்து, 50 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி அம்பலத்துக்கு வந்தது. அமித் ஷா தமிழகம் வரும்போது, யார் ஆட்சி செய்தாலும், ஊழல் அரசு என, பேசுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார். கடந்த 2018ல், சென்னையில் நடந்த கூட்டத்தில் பேசிய அமித் ஷா, 'நாட்டிலேயே ஊழல் அதிகமாக உள்ள மாநிலமாக தமிழகம் உள்ளது' என்றார். அப்போது, பழனிசாமி ஆட்சி தமிழகத்தில் நடந்தது. பழனிசாமியோடு தான், 2019 லோக்சபா தேர்தலை பா.ஜ., சந்தித்தது. பின், 2021 சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க.,வுடன் பா.ஜ., கூட்டணி வைத்தது. பழனிசாமி உறவினர்கள், முன்னாள் அமைச்சர்கள் வீடுகள், அலுவலகங்களில், வருமான வரித் துறை, அமலாக்கத்துறை நடத்திய சோதனைகள் எல்லாம் என்ன ஆயின என்பதை அமித் ஷா சொல்வாரா? பழனிசாமி ஆட்சியின் ஊழல்கள், 'ரெய்டு'கள், சி.பி.ஐ., விசாரணைகள், சோதனைகள் எல்லாமே நாடகம் தான். பழனிசாமி ஆட்சியை பயமுறுத்தி பணிய வைக்கத்தான், அவை பயன்படுத்தப்பட்டன. ஊழலை ஒழிக்கவில்லை. அந்த ஊழல் புகார்களை வைத்து, கூட்டணி பேரம் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. பா.ஜ.,வின் கூட்டணிக்கு ஊன்றுகோலாக ஊழல்கள் தான் இருக்கின்றன. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ