மேலும் செய்திகள்
மனைப்பட்டா கேட்டு போராட்டம்
09-Aug-2025
மதுரை:ராமநாதபுரம் மாவட்டம் கீழ முதுகுளத்துாரில், பட்டியல் சமூகத்தினருக்கு இலவச வீட்டு மனை பட்டா ஒதுக்கீட்டில் அரசு நிபந்தனை விதித்ததை எதிர்த்து, பொது நல வழக்கு தாக்கல் செய்த ரியல் எஸ்டேட் புரோக்கருக்கு, 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. முதுகுளத்துார் அமல்ராஜ் தாக்கல் செய்த பொது நல மனு: பட்டியல் சமூகம் மற்றும் பழங்குடியின மக்களில் தகுதியானவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை அரசு வழங்குகிறது. கீழ முதுகுளத்துாரில் ஆதிதிராவிடர் மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்க தமிழக வருவாய்த்துறை உத்தரவிட்டது. அச்சொத்தை பயனாளிகள் 10 ஆண்டுகளுக்கு யாருக்கும் விற்கக்கூடாது. அதன் பிறகும் கூட அதை, பட்டியல் சமூகம் மற்றும் பழங்குடியின மக்களுக்கு மட்டுமே விற்க முடியும் என 2021ல் நிபந்தனை விதிக்கப்பட்டது. இந்நிபந்தனை பாகுபடுத்தும் வகையில் உள்ளது. அது செல்லாது என ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். அந்த மனுவை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு விசாரித்தது. நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: இது ஒரு சிறப்புத் திட்டம். பயனாளிகளின் நலனை பாதுகாக்க சில நிபந்தனைகள் விதிக்கப் படுகின்றன. இலவச வீட்டு மனைகள் குடியிருப்பு நோக்கத்திற்காக ஒதுக்கப்படுகின்றன. அவர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்ப ட வேண்டும் என்பதே அரசின் கருத்து. நிபந்தனைகள் விதிக்கப்படாவிடில், இலவச வீட்டு மனைகளை மூன்றாம் தரப்பினருக்கு விற்கும் வாய்ப்பு உள்ளது. அச்சூழலில் அரசு நலத்திட்டத்தின் நோக்கம் தோல்வியுறும். மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. மனுதாரர் ரியல் எஸ்டேட் புரோக்கர். குறிப்பிட்ட பிரிவு மக்களின் நலனிற்காக செயல்படுத்தப்படும் நலத்திட்டத்தை தேவையின்றி கேள்விக்குட்படுத்தி இம்மனுவை அவர் தாக்கல் செய்துஉள்ளார். அவருக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. இதை ராமநாதபுரம் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலரிடம் செலுத்த வேண்டும். அவர் அதை, கமுதி அருகே செங்கப்படை ஆதிதிராவிடர் நல உயர்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு அடிப்படை வசதிகளை நிறைவேற்ற பயன்படுத்த வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.
09-Aug-2025