நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கியது கோர்ட்
சென்னை:போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் கைதான, நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோருக்கு, நிபந்தனை ஜாமின் வழங்கி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரத்தில், கடந்த மாதம், 23ல் நடிகர் ஸ்ரீகாந்த், 26ல் நடிகர் கிருஷ்ணா ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ஜாமின் கோரி, சென்னை போதைப்பொருள் கடத்தல் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில், நடிகர்கள் இருவரும் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், இருவரின் ஜாமின் மனுக்களையும், இம்மாதம், 3ம் தேதி தள்ளுபடி செய்தது.இந்நிலையில், இருவரும் ஜாமின் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் நீதிபதி எம்.நிர்மல்குமார் முன் விசாரணைக்கு வந்தன. நடிகர்கள் ஸ்ரீகாந்த் தரப்பில், மூத்த வழக்கறிஞர் ஆர்.ஜான் சத்யன், கே.பிரேம் ஆனந்த், கிருஷ்ணா தரப்பில் வழக்கறிஞர் எல்.இன்பேன்ட் தினேஷ் ஆகியோர் ஆஜராகினர்.அப்போது அவர்கள், 'ஸ்ரீகாந்திடம் இருந்து போதைப்பொருள் எதுவும் கைப்பற்றப்படவில்லை; நடிகர் கிருஷ்ணாவிடம் நடத்திய மருத்துவ பரிசோதனையில், போதைப்பொருள் பயன்படுத்தியது நிரூபிக்கப்படவில்லை' என்று வாதிட்டனர். இருவருக்கும் ஜாமின் வழங்க, போலீசார் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி, நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டார். 'இருவரும் இரண்டு வாரத்துக்கு நுங்கம்பாக்கம் போலீஸ் நிலையத்தில், காலை 10:30 மணிக்கு ஆஜராகி கையெழுத்திட வேண்டும். பின், தேவைப்படும் போது ஆஜராக வேண்டும்' என, நிபந்தனையும் விதித்தார்.