உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஒரு கொடிக்கம்பம் வைக்க ரூ.1,000 வசூலிக்கும்படி அரசுக்கு கோர்ட் யோசனை

ஒரு கொடிக்கம்பம் வைக்க ரூ.1,000 வசூலிக்கும்படி அரசுக்கு கோர்ட் யோசனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சாலை ஓரங்களில் தற்காலிகமாக கொடிக்கம்பங்கள் வைக்க அனுமதி கோரும் நபர்களிடம், ஒரு கொடி கம்பத்துக்கு, 1,000 ரூபாய் வசூலிக்கும்படி, தமிழக அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்திஉள்ளது. மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த அ.தி.மு.க., பிரமுகர்கள் கதிரவன் மற்றும் சித்தன் ஆகியோர், உயர் நீதிமன்ற மதுரை கிளையில், மாவட்டத்தில் இரு இடங்களில் அ.தி.மு.க., கொடிக் கம்பங்களை அமைக்க அனுமதி கோரி வழக்கு தொடர்ந்தனர். அரசாணை இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், 'தேசிய, மாநில நெடுஞ்சாலை துறைகள், உள்ளாட்சி அமைப்புகள், அரசின் பொது இடங்களில் நிறுவப்பட்டுள்ள கட்சிகள், ஜாதி, மதம் சார்ந்த அமைப்புகளின் கொடிக் கம்பங்களை, கடந்த ஏப்ரல் 28ம் தேதிக்குள் அகற்ற வேண்டும்' என, கடந்த ஜனவரியில் உத்தரவிட்டது. அதன் அடிப்படையில், அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பில், கொடிக்கம்பங்கள் அமைப்பதற்கு அனுமதி வழங்குவது தொடர்பாக, மண்டல மற்றும் மாவட்ட அளவில் குழுக்கள் அமைத்து, தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் சார்பில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளுக்காக, கொடிக்கம்பங்கள் அமைக்கும்போது, சாலை நடுவில் உள்ள, 'சென்டர் மீடியன்' பகுதிகளில் கொடிக்கம்பங்கள் அமைக்கக் கூடாது; மூன்று நாட்களுக்கு மேல் கொடிக்கம்பங்கள் வைத்திருக்கக் கூடாது என்பது உள்ளிட்ட வழிகாட்டு விதிமுறைகள் வகுக்கப்பட்டன. இந்த வழக்கு, நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. ஏற்க மறுப்பு அப்போது, தமிழக அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி, ''கொடிக்கம்பங்கள் அமைப்பது தொடர்பாக அரசாணையும், வழிகாட்டு விதிமுறைகளும் வகுக்கப்பட்டு உள்ளன. இவை பின்பற்றப்பட்டு வருகின்றன,'' என்றார். இதை ஏற்க மறுத்த நீதிபதி கூறியதாவது: அரசியல் கட்சி கூட்டங்களுக்கு சாலையின், 'சென்டர் மீடியன்'களில் கொடிக்கம்பங்கள் அமைக்கப்படுகின்றன. அனுமதியின்றி கொடிக்கம்பங்கள் வைக்கும் நபர்களுக்கு எதிராக, எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சாலை ஓரங்களில் கொடிக் கம்பங்கள் வைக்க அனுமதி கேட்பவர்களிடம், ஒரு கொடிக்கு, 1,000 ரூபாய் வீதம் வசூலிக்க வேண்டும். இது, அரசுக்கு வரு வாயை ஈட்டி கொடுக்கும். மேலும், கொடிக் கம்பங்கள் அமைப்பது தொடர்பான விதிகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என, அனைத்து துறை தலைவர்களுக்கும், தலைமை செயலர் மற்றும் டி.ஜி.பி., சுற்றறிக்கை பிறப்பிக்க வேண்டும். அனுமதியின்றி, தற்காலிகமாக கொடிக்கம்பங்கள் வைத்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது, துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை நவ., 12ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

karuththuraja
அக் 16, 2025 04:43

நீதிமன்றங்கள் சொல்லும் இந்த கலாச்சாரம் ஏட்டில் மட்டும் உள்ளது, செயல் வடிவம் அரசாங்கத்தின் கையில் உள்ளது, நடைமுறை ரொம்ப சிக்கல் தான்.


Kasimani Baskaran
அக் 16, 2025 03:50

போஸ்டர் ஒட்டக்கூடாது என்றாலும் கூட ஒட்டத்தான் செய்கிறார்கள். அதே போல கொடிக்கம்பம் வைக்கக்கூடாது என்று சொன்னால் அப்படியே விட்டு விடுவார்களா என்ன? ஆணையை மீறுவது ஒரு பொழுது போக்கு போல.. தீம்க்காவை மிஞ்சிய நீதிமன்றம் கிடையாது.


Mani . V
அக் 16, 2025 03:25

இதென்னய்யா கொடுமையாக இருக்கிறது? இவ்வளவு பெரிய தொகையை ஊழல் கட்சிகள் எப்படி செலுத்த முடியும்? ஒரு பத்து ரூபாய் என்று சொல்லியிருந்தால் பரவாயில்லை. சரி, சாலையின் நடுவில் குழி தோண்டி கொடிக்கம்பம் நடும் தறுதலைகளை என்கவுண்டரில் போட்டுத் தள்ள முடியாதா யுவர் ஹானர்?


அன்பு
அக் 16, 2025 02:12

அதனால் ஏற்படும் அனர்த்தங்களுக்கு ஆயிரம் ரூபாய் போதுமா?


Ramesh Sargam
அக் 16, 2025 01:48

கோர்ட்டின் யோசனை என்னமோ ஓகேதான். ஆனால் இதில் ஒரு பிரச்சினை. அந்த ரூ. ஆயிரத்தை, திமுக போன்ற கட்சியினர் தங்கள் கட்சிப்பணத்திலிருந்து செலவழிப்பார்களா என்பதுதான் சந்தேகம். இப்பொழுது அந்த கட்சியின் அல்லக்கைகள் கொடி வைக்க விரும்பம் வீதியில் உள்ள கடைக்காரர்களை மற்றும் அங்கு வசிக்கும் மக்களை மிரட்டி அந்த ரூ. ஆயிரத்தை வசூலிப்பார்கள். இப்படியும் நீதிமன்றம் யோசிக்கவேண்டும். நீதிமன்றங்களின் யோசனை பொதுமக்களுக்கு ஆபத்தாக ஆகக்கூடாது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை