பிளாஸ்டிக் நுண்துகள் விவகாரம் மத்திய அரசு மீது கோர்ட் அதிருப்தி
சென்னை: மனிதர்களின் ஆரோக்கியத்தில், 'மைக்ரோ பிளாஸ்டிக்' எனப்படும், பிளாஸ்டிக் நுண்துகளின் பாதகமான தாக்கம் குறித்து, இன்னும் அறியப்படவில்லை என்ற மத்திய அரசின் விளக்கம் கவலை அளிப்பதாக, சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பிறந்த குழந்தை களின் நஞ்சுக்கொடியில், 'மைக்ரோ பிளாஸ்டிக்' எனும் பிளாஸ்டிக் நுண்துகள் கண்டறியப்பட்டதாக, செய்திகள் வெளியாகின. மனிதர்கள், தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் மீது, 'மைக்ரோ பிளாஸ்டிக்' ஏற்படுத்தும் பாதகமான தாக்கம் உள்ளதா என்பது தொடர்பாக, மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை தாக்கல் செய்யும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இந்த வழக்கு, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரத சக்கரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வு முன், விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய சுகாதாரம் அமைச்சகம், மாநில சுகாதாரத் துறை சார்பில், தனித்தனியே அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. பின், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: மத்திய அரசின் சுற்றுச்சூழல் காலநிலை மாற்ற அமைச்சகத்தால் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், மனிதர்கள் ஆரோக்கியத்தில், 'பிளாஸ்டிக்' கழிவுகளின் தாக்கம் குறித்த விபரங்கள் இடம்பெறவில்லை. மைக்ரோ பிளாஸ்டி க்கின் தாக்கம் மனித ஆரோக்கியத்தில் என்னவாக இருக்கும் என்பது, இன்னும் அறியப்படவில்லை என்று, அறிக்கையில் கூறப்பட்டுள்ள தகவல், மிகவும் கவலை அளிக்கிறது. எனவே, மத்திய, மாநில அரசுகள், இவ்விவகாரம் தொடர்பாக தகுந்த விபரங்களுடன் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.