உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கிரைம்: மணமான அக்கா காதலன் கொலை; தலையை துண்டித்த தம்பி

கிரைம்: மணமான அக்கா காதலன் கொலை; தலையை துண்டித்த தம்பி

மதுரை மாவட்டம், கூடக்கோவில் அருகே கொம்பாடியை சேர்ந்த நந்திபெருமாள் மகன் சதீஷ்குமார், 28, கட்டடங்களுக்கு கம்பி கட்டும் தொழிலாளி. அதே ஊரைச் சேர்ந்தவர் அழகுமலை மகள் மகாலட்சுமி, 23. இருவரும் காதலித்தனர். வெவ்வேறு சமூகத்தினர் என்பதால் இருவரின் பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.இந்நிலையில், மகாலட்சுமிக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. திருமணம் நடந்த ஒரே வாரத்தில் கணவரோடு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பெற்றோர் வீட்டிற்கு மகாலட்சுமி திரும்பி வந்து விட்டார். அதன் பின், தொடர்ந்து சதீஷ்குமாரிடம் போனில் பேசி வந்தார். இதை மகாலட்சுமியின் தம்பி பிரவீன்குமார், 20, கண்டித்தார்.நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து வீட்டிற்கு சதீஷ்குமார் சென்றபோது, அவரை வழிமறித்து முகத்தில் மிளகாய் பொடியை துாவி, அரிவாளால் பிரவீன்குமார் வெட்டியதில் தலை துண்டானது. துண்டித்த தலையை ஊர் மந்தை மேடையில் பிரவீன்குமார் வைத்தார். அப்போதும் ஆத்திரம் குறையாதவர் வீட்டிற்கு சென்று, மகாலட்சுமியின் கழுத்தை அறுத்து கொலை செய்தார். தடுத்த தாய் சின்ன பிடாரியின் கையை துண்டாக வெட்டி விட்டு தப்பி ஓடி விட்டார். அவரை கைது செய்ய இரு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

மனைவியை வெட்டிய கணவர் கைது

தூத்துக்குடி அல்லிக்குளம் பகுதியை சேர்ந்தவர் குணா 35. இவரது மனைவி அமராவதி 28. இரண்டு குழந்தைகள் உள்ளனர். குணா வேலைக்கு செல்லவில்லை. அமராவதி மகளிர் சுய உதவி குழுவில் இணைந்து பணியாற்றி வருகிறார். இதனால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.நேற்று முன்தினம் துாத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு பேரணியில் பங்கேற்று விட்டு டூவீலரில் அமராவதி வீட்டுக்கு வந்து கொண்டு இருந்தார். கோரம்பள்ளம் அருகே அவரை வழிமறித்து கணவர் குணா சரமாரியாக அரிவாளால் வெட்டினார்.கழுத்து பகுதியில் பலத்த காயமடைந்த அவர் உயிருக்கு போராடிய நிலையில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ்வழக்கில் குணா, அவரது தம்பி முருகன், நண்பர் வள்ளி ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

மனநல மாத்திரை கொடுக்க மறந்த தந்தையை கொன்ற மகன் கைது

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே பரம்பூர் பகுதியை சேர்ந்தவர் மாதவன், 58. இவர், அப்பகுதியில் சிமென்ட், இரும்பு உள்ளிட்ட கட்டட பொருட்கள் விற்பனை செய்கிறார். இவரது மகன் சதீஸ், 23, நீண்ட காலமாக மனநிலை பாதிக்கப்பட்டு, வீட்டில் வசித்து வந்தார்.இந்நிலையில், அவருக்கு நாள் தோறும் வழங்கப்படும், மனநிலை பாதிப்பை குணப்படுத்தும் மாத்திரைகளை, இரு தினங்களாக வழங்கவில்லை என கூறப்படுகிறது.மறதியால் அவ்வாறு அவர் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று காலையில் மனநிலை பாதிக்கப்பட்டு கோபமாக இருந்த மகன், அவரது தந்தையை அரிவாளால் வெட்டினார். இதில், பலத்த காயம் அடைந்த மாதவன், சம்பவ இடத்திலேயே இறந்தார். அன்னவாசல் போலீசார், சதீஸை கைது செய்தனர்.

முதியவர் கொலை: முன்னாள் வீரருக்கு ஆயுள்

கிருஷ்ணகிரி அடுத்த பெல்லாரம்பள்ளியை சேர்ந்தவர் பாலமுருகன், 34. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த அவரது பங்காளியான முன்னாள் ராணுவ வீரர் சூர்யா, 42. அவரது அண்ணன்பச்சையப்பன், 46, ஆகியோருக்கும் இடையே, 2013 நவ., 3ல், நிலத்தகராறு ஏற்பட்டது. அப்போது, அங்கு பாலமுருகனின் மாமனார் முனியப்பன், 60, என்பவரை சூர்யா மற்றும் பச்சையப்பன் இருவரும் அரிவாளால் வெட்டி கொன்றனர்.கிருஷ்ணகிரி போலீசார், சம்பவம் தொடர்பாக 11 பேரை கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்த வழக்கை விசாரித்த நீதிபதி தாமோதரன் நேற்று தீர்ப்பு வழங்கினார். அதில், முனியப்பனை கொன்ற ராணுவ வீரர் சூர்யா, பச்சையப்பன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை, தலா, 2,000 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.அதுபோல, சூர்யா தரப்பினரை தாக்கிய பாலமுருகனுக்கு ஓராண்டு சிறை, அவரது தரப்பை சேர்ந்த ராஜா, 42, என்பவருக்கு மூன்றாண்டு சிறை மற்றும் ஐந்து பேருக்கு ஜாமின் வழங்கி நீதிபதி தீர்ப்பளித்தார்.

மாணவியரை வைத்து அவதுாறு வீடியோ தயாரித்த ஆசிரியை

திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லுாரில் செயல்படும் அரசு ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியையாக லீலா நவரோஜ் உள்ளார். இங்கு ஆசிரியையாக உள்ள மங்களம் என்பவருக்கும், தலைமை ஆசிரியைக்கும் இடையே கருத்து வேறுபாடு உள்ளது. எனவே தலைமை ஆசிரியைக்கும், அங்கு வந்து செல்லும் ஆட்டோ டிரைவர் ஒருவருக்கும் தொடர்பு இருப்பதாக கூறி, பள்ளியில் பயிலும் மாணவியரை வீடியோவில் பேச சொல்லி, ஆசிரியை மங்களம் வீடியோ எடுத்தார்.அதற்கு அதே பகுதியைச் சேர்ந்த அருள்ராஜ் மனைவி அனுராதா என்பவர் உதவி புரிந்தார். அந்த வீடியோ வெளியானதால் பெற்றோர் பதட்டம் அடைந்தனர். இது குறித்து ஒரு மாணவியின் தாய், வீரவநல்லூர் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து, ஆசிரியை மங்களம், அனுராதா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

மனைவியுடன் இன்ஜினியர் தற்கொலை

கர்நாடகா மாநிலம், பெங்களூரு எச்.எம்.டி., லே--அவுட்டை சேர்ந்தவர் வம்ஷிதர் பசுபிலடி, 50. இவர் மனைவி தீனாவம்சி, 45, இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி வந்த வம்ஷிதர், சமீபகாலமாக பணிக்கு செல்லவில்லை. கிருஷ்ணகிரி மாவட்டம், தளியில், ஜெபராணி, 36, என்பவரின் வாடகை வீட்டில் கடந்த ஓராண்டாக, மனைவியுடன் வசித்தார்.கடந்த, 28ம் தேதிக்கு பின், கணவன், மனைவி இருவரையும் அக்கம் பக்கத்தினர் யாரும் பார்க்கவில்லை. உட்புறமாக பூட்டியிருந்த அவரது வீட்டிலிருந்து நேற்று துர்நாற்றம் வீசியதால், வீட்டின் உரிமையாளர் ஜெபராணி, தளி போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் மற்றும் போலீசார், அங்கு சென்று, வீட்டின் கதவை உடைத்து பார்த்தபோது, படுக்கையறையில், கணவன், மனைவி இருவரும் இறந்து கிடந்தனர்; உடல்கள் அழுகிய நிலையில் இருந்தன. உடல்கள் மீட்கப்பட்டு, பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. அருகில், பூச்சிக்கொல்லி மருந்து பாக்கெட்டுகள் இருந்தன. அதை அவர்கள் சாப்பிட்டு தற்கொலை செய்தது தெரிந்தது. தற்கொலைக்கான காரணம் குறித்து, தளி போலீசார் விசாரிக்கின்றனர்.

மாணவர்களிடம் சில்மிஷம்: பள்ளி வார்டன் கைது

திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த, இளையாங்கன்னியில், அன்னை கார்மேல் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளி மாணவர் விடுதி வார்டனாக, தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அடுத்த வட குளத்தை சேர்ந்த செபாஸ்டின், 56, என்பவர் பணிபுரிந்து வருகிறார். விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்களிடம், கடந்த சில நாட்களாக, இவர் சில்மிஷம் செய்து வருவதாக, தங்கள் பெற்றோரிடம் மாணவர்கள் புகார் கூறினர்.அதிர்ச்சியடைந்த பெற்றோர், பள்ளி நிர்வாகம் மற்றும் தண்டராம்பட்டு அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். அதன்படி, போலீசார் நேற்று, போக்சோவில் வழக்குப்பதிந்து, விடுதி வார்டன் செபாஸ்டினை கைது செய்தனர்.

டாஸ்மாக் ஊழியரிடம் ரூ.42,000 கொள்ளை

ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அடுத்த புன்னையில், டாஸ்மாக் கடை உள்ளது. இங்கு விற்பனையாளராக சிவக்குமார், 49, என்பவர் பணிபுரிகிறார். நேற்று முன்தினம் இரவு, டாஸ்மாக் கடைக்கு வந்த கும்பல், இலவசமாக, 'பீர்' கேட்டது. தர மறுத்த அவரை, அக்கும்பல், கத்தியை காட்டி மிரட்டி, டாஸ்மாக் கடை கல்லாபெட்டியில் இருந்த, 42,360 ரூபாயை கொள்ளையடித்து சென்றது. நெமிலி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ