குற்றவாளிகளுக்கு பயம் போயே போச்சு! அரசுக்கு பழனிசாமி கண்டனம்
சென்னை:திருநெல்வேலியில் நீதிமன்ற வாயிலில் நடந்த கொலைக்கு, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:'எங்கும் கொலை; எதிலும் கொலை' என்ற தி.மு.க., ஆட்சியின் அவல நிலைக்கு, நீதிமன்றங்கள் கூட விதிவிலக்கல்ல. நெல்லையில் நீதிமன்ற வாயிலில், இளைஞர் ஒருவர் மர்ம நபர்களால் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். காவல் துறையினர் இதை தடுக்காமல் வேடிக்கை பார்த்ததாக, வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.நீதிமன்ற வாயில்களில் குற்றச்செயல்கள் அச்சமின்றி தொடர்ந்து நடைபெறுவது, முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில், சட்டம் - ஒழுங்கு மீள முடியாத அளவிற்கு படுபாதாளத்திற்கு சென்று விட்டதன் அத்தாட்சி.அது மட்டுமின்றி, கடந்த 24 மணி நேரத்தில், சென்னை தி.நகரில் வங்கிக்குள் புகுந்து, ஊழியரின் காது வெட்டு; சிவகங்கையில் தாயின் கண்ணெதிரே மகன் வெட்டிக்கொலை; சென்னை அம்பத்துாரில் நள்ளிரவில் கஞ்சா போதையில் ஐந்து பேருக்கு கத்திக்குத்து என, குற்றச்செயல்கள் நடந்துள்ளன.தனிப்பட்ட கொலைகள் என்று, இன்னும் எத்தனை நாட்கள் தான் தி.மு.க., அரசு கடந்து செல்லப் போகிறது? நிர்வாகத்திறன் துளியும் இல்லாமல், சட்டத்தின் மீதோ, அதை காக்கும் இடத்தில் உள்ள காவல் துறை மீதோ, குற்றவாளிகளுக்கு அச்சம் அறவே இல்லை.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன்: நெல்லை சம்பவம், தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்கேட்டின் சாட்சி. இதற்கு, தி.மு.க., அரசின் நிர்வாக தோல்வியும், காவல் துறையினர் சுதந்திரமாக செயல்பட முடியாத சூழலுமே காரணம்.முதல்வர் ஸ்டாலினால், தன் கட்டுப்பாட்டில் உள்ள காவல் துறையை கூட முறையாக கையாள முடியவில்லை. பா.ம.க., தலைவர் அன்புமணி: திருநெல்வேலி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில், மாயாண்டி என்ற இளைஞர் பட்டப்பகலில் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். 20க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்த நிலையில், அவர்களையும் மீறி இந்த படுகொலை நடந்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. காவல் துறையின் இந்த படுதோல்விக்கு தமிழக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்.ஒரு மாநிலத்தில் அமைதியும், சட்டம் -- ஒழுங்கும் நிலவாவிட்டால், அங்கு மக்களால் வாழ முடியாது. சட்டம் - ஒழுங்கை கட்டுப்படுத்த முடியாத தமிழக ஆட்சியாளர்கள், 'மக்கள் மகிழ்ச்சியாக இருக்கின்றனர்' என்ற மாய உலகில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.அதிலிருந்து வெளியே வந்து, சட்டம் -- ஒழுங்கைப் பாதுகாக்கவும், மக்கள் அச்சமின்றி நடமாடவும் வகை செய்ய வேண்டும்.
'போலீஸ் துரித நடவடிக்கை'
தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதியின் அறிக்கை: திருநெல்வேலி மாவட்டம், கீழ நத்தத்தைச் சேர்ந்த மாயாண்டி, மாவட்ட நீதிமன்றத்திற்கு வெளியே கொலை செய்யப்பட்டு உள்ளார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், கொலையாளிகளை விரட்டிச் சென்று, ஒருவரை மடக்கி பிடித்துள்ளனர். காரில் தப்பிச் சென்ற மூன்று பேரை, கொலை நடந்த இரண்டே மணி நேரத்தில் கைது செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இவ்வளவு துரிதமாக, கொலையாளிகள் கைது செய்யப்பட்டதை பொறுக்க முடியாமல், வழக்கம் போல சட்டம் - ஒழுங்கு சரியில்லை என்ற புழுத்துப் போன பொய்யை, எதிர்க்கட்சி தலைவர் பாட துவங்கி இருக்கிறார்.சாத்தான்குளத்தில் தந்தை - மகன் அடித்து கொலை, பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை, கோடநாடு கொலை சம்பவம் என, பொதுமக்கள் வெளியில் நடமாடவே அச்சப்படும் சூழலில், தமிழகம் தவித்து கிடந்ததை மறந்து விட்டார். மத்திய அரசின் தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டிருக்கும் புள்ளி விபரங்கள், அ.தி.மு.க., ஆட்சியில் குற்றச் செயல்கள், பல்கி பெருகி கிடந்ததை வெளிச்சம் போட்டு காட்டுகின்றன.பழனிசாமிக்கு தற்போது மக்கள் நலன் பேணும், முதல்வர் தலைமையிலான ஆட்சியை கண்டு பொறாமையும், வயிற்றெரிச்சலும் வருவது இயல்புதான். பொறாமை மனநலத்தை கெடுக்கும். வயிற்றெரிச்சல் உடல் நலத்தை கெடுக்கும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.