| ADDED : டிச 04, 2024 07:07 AM
கடலூர்; பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர்-புதுச்சேரி-சென்னை சாலையில் போக்குவரத்து மீண்டும் தொடங்கி உள்ளது.தமிழகத்தின் கடலோர மற்றும் உள் மாவட்டங்களை பெஞ்சல் புயல் கடுமையாக தாக்கியது. நீர்நிலைகள் நிரம்பி ஊருக்குள் வெள்ள நீர் புகுந்ததால் ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகள், உடமைகள், கால்நடைகளை இழந்து பெரும் சேதத்துக்கு ஆளாகினர்.புயல் ஓய்ந்துவிட்ட போதிலும் பல மாவட்டங்களில் இயல்பு நிலை இன்னமும் திரும்பவில்லை. வெள்ள நிவாரண பணிகளில் அதிகாரிகள் முழு வீச்சில் இருக்க பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெள்ள நிவாரணமாக ரூ.2000 அளிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.புயல், மழையை தொடர்ந்து தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்துக்கு கடலோர மாவட்டம் கடலூரும் தப்பவில்லை. வெள்ளத்தினால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளதோடு, முக்கிய சாலையான கடலூர்-புதுச்சேரி சாலை கடுமையாக சேதம் அடைந்திருந்தது. சாலை முழுவதும் வெள்ளநீர் வழிந்தோடியதால் பாதுகாப்பு கருதி போக்குவரத்து நிறுத்தப்பட்டது.இந் நிலையில், அந்த சாலையில் மீண்டும் போக்குவரத்து தொடங்கி இருக்கிறது. இயல்பு நிலை திரும்பியதை அடுத்து, கடலூரில் இருந்து புதுச்சேரி வழியாக சென்னைக்கு வழக்கம் போல் வாகனங்கள் செல்கின்றன. புயல் பாதிப்புக்கு பின்னர் போக்குவரத்து தொடங்கி இருந்தாலும் சாலையில் ஆங்காங்கே பழுது அடைந்திருக்க வாய்ப்பு உள்ளது. எனவே வாகன ஓட்டிகள் கவனத்துடன் சாலையில் பயணிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.